கோட்டாபயவுக்கு தேவையென்றால் மகிந்தவிடம் கேட்பார் ! விமலுக்கு பதிலடி

அரசாங்கத்தில் இருந்து கொண்டு பிரச்சினை கொடுக்க வேண்டாம்.தயவு செய்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுங்கள் என அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்சியில் பதவி வேண்டுமானால் அவர் தனது சகோதரருடன் அதுகுறித்து பார்த்துக் கொள்வார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடங்கும் போது கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு வௌியிட்டனர். அதனால் எமது கட்சி குறித்து பேச அவர்களுக்கு அருகதை இல்லை.

எமக்கு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிடும். இவர்களுடன் பயணித்தால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மக்கள் நீங்கள் சொல்வதை கேட்பார்கள் என்றால் கட்சியை விட்டு விலகிச் செல்லலாம். இங்கிருந்து பிரச்சினை கொடுக்க வேண்டாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சினையை பேசித் தீர்க்க முடியாவிட்டால் தினமும் சண்டை போட்டுக் கொண்டா இருப்பார்கள்? இல்லை விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவர். அதனால் நாம் தயவுசெய்து சென்றுவிடுமாறு அழைப்பு விடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.