மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்ககோரி கவனையீர்ப்புபோராட்டம்!

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 11 வயது சிறுமி ஒருவரின் உடல் கடந்த 10 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுமியின் தாய் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் சிறிய தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சிறுமி தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை அடுத்து, குறித்த சிறுமி உயிரிழந்த விடயத்தில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பெரியகல்லாறு பிரதேசத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.