போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிடவுள்ள முடிவு

 

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களால் இன்று மதியம் 12.30 மணியளவில் ஊடக சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் தமது தற்போதைய நிலைப்பாட்டினை தெரிவிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்சநிலை காரணமாக மாற்றமடைந்த நிலையில், மாணவர்கள் சிலர் தொடர்ந்தும் உண்ணா விரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் நேற்றுப் பிற்பகலில் இருந்து மாணவர்கள் ஆரம்பித்துள்ள “தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம்” இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.