கோட்டா தவறான செய்தியை வழங்கியுள்ளார் – மனோ கணேசன்

தனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியது, ஜனாதிபதி ஒருவர் கூறக் கூடிய கருத்து அல்ல எனவும் இது குறித்து வருத்தமும் துக்கமும் அடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நந்தசேன கோட்டாபய ராஜபக்ச என்பது ஜனாதிபதியின் முழுமையான பெயர். ஜனாதிபதியை நந்தசேன, கோட்டாபய மற்றும் ராஜபக்ச என்றும் அழைக்க முடியும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் இது சம்பந்தமாக ஜனாதிபதி கூறிய தொனி முற்றிலும் தவறானது. ஜனாதிபதி நாட்டுக்கு தவறான செய்தியை வழங்கியுள்ளார்.

அத்துடன் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்ல பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே வேண்டும் என பௌத்த பிக்குமார் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னணியில் உள்ள அர்த்தம் என்ன?. அது எனக்கு புரியவில்லை. ஜனாதிபதி அதனை நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி நாட்டுக்காக போருக்கு தலைமை தாங்கியதாக நாங்கள் நினைக்கின்றோம். தற்போது பார்க்கும் போது அவர் நாட்டுக்காக போருக்கு தலைமை தாங்கவில்லை, தனக்காக தலைமை தாங்கியுள்ளதை புரிந்துக்கொள்ள முடிகின்றது.

இது தவறானது. அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார், தற்போது அந்த பதவியில் இல்லை. 69 லட்சம் மக்கள் வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். ஜனாதிபதியின் இந்த கருத்தானது தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் அவமரியாதையாக நான் கருதுகிறேன்.

பாதுகாப்புச் செயலாளராக தன்னை செயற்படுாறு அழைப்பு விடுக்கப்படுகிறது என்று ஜனாதிபதி கூறுகிறார் எனில் அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களுக்கு அவர் கூறப் போகும் பதில் என்ன? எனவும் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.