இந்தியா தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலங்கைக்கு முன்னுரிமை!

இந்தியா தயாரித்த கொவிட் தடுப்பு மருந்தை ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கையில் இது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடிய வேளையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி விபரித்தார். சிகிச்சை தேவைகளை முறையாக மதிப்பிட்ட பின்னர், இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலங்கை நாட்டம் கொண்டுள்ளதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை இருதரப்பு உறவுகளை பரஸ்பரம் கூடுதல் அனுகூலங்கள் பெறும் வகையில் வளர்த்துக் கொள்வது பற்றி ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இணக்கம் கண்டார்கள். இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கையில் அமுலாகும் திட்டங்களுக்கு அப்பால், ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய மேலும் பல துறைகள் பேச்சுவார்த்தையில் இனங்காணப்பட்டன.

இலங்கையில் முறையான கல்வி பெற்ற இளம் தலைமுறை இருக்கிறது. இந்த இளைஞர் – யுவதிகளுக்கு பல்வேறு துறைகளில் தொழில்பயிற்சி வழங்க இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.

இந்தியா ஏற்கனவே வழங்கும் உதவிகளை மேலும் விஸ்தரிக்கப் போவதாக அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதியளித்தார்.

கொவிட் தொற்று நெருக்கடியால் சீர்குலைந்த சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதன் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தினார்கள். சுற்றுலா மறுமலர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எட்டுவதற்காக இந்தியா, இலங்கை, மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.