கொழும்பில் முக கவசம் அணியாமல் சென்ற இருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று!

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறையான முகக்கவசம் அணிவதை தவிர்த்து, நடமாடுவோரை கைது செய்யவும் அவர்களை பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் இன்று முதல் விஷேட சுற்றிவளைப்புக்களை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை முதல் மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில், கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்புக்களில் முகக்கவசம் அணியாத 300 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் அவர்களது தொடர்பாடல் வட்டத்துக்கு உட்பட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களுக்கும், முகக்கவசம் அணியாத ஏனையோருக்கும் எதிராக நீதிமன்றில், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.