கொரோனா தடுப்பு மருந்தை இலங்கைக்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கை – நுண்ணுயிரியல் பேராசிரியர்

உலக நாடுகள் சிலவற்றில் கொரோனா வைரஸ் தடுப்புமருந்து கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போது நிலைமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் உலகளாவிய ரீதியில் அனைவராலும் பேசப்பட்டுவருகின்றது. பிரித்தானியாவில் மாத்திரமன்றி தென்னாபிரிக்காவிலும் அத்தகைய சிக்கலுக்குரிய வைரஸ் காணப்படுகின்றது. அது தற்போதுள்ள வைரஸை விடவும் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் வேகமாக பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது. ஆகையினாலேயே இதுகுறித்து அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு நிலைமாற்றமடைந்த புதிய வைரஸ்கள் எமது நாட்டில் பரவக்கூடுமா? அவற்றின் தன்மை எத்தகையது? போன்ற விடயங்கள் குறித்து நாம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். எனினும் தற்போது மீண்டும் விமானநிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வைரஸ் தொடர்பில் நன்கு ஆராய்வது அவசியமாகும். ஆகவே ஒவ்வொரு மாத இறுதியிலும் உள்ள வைரஸின் தன்மை குறித்து மாத்திரம் ஆராயாமல், இனிமேல் அதனை இருவாரங்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறோம். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அதற்கான நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதால், எதிர்வரும் காலங்களிலும் அதனை எவ்வித தடைகளுமின்றி மேற்கொள்ள முடியும்.

அடுத்ததாக உலக நாடுகள் சிலவற்றில் கொரோனா வைரஸ் தடுப்புமருந்து கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை சரியான மட்டத்தில் பேணுவது அவசியமாகும். அதற்கேற்றவாறான உணவுப்பொருட்களை உட்கொள்வதுடன் முறையான உடற்பயிற்சியும் செய்யவேண்டும் என்றார்.