ராஜபக்ஷக்களின் புதிய யாப்புக் கதை- கூட்டாக முடிவெடுக்க தமிழ் தரப்பு தயாரா?

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கோடி காட்டியிருக்கிறார். 20ஆவது திருத்தத்தின் மீது சர்ச்சைகள் எழுந்த பொழுது இரண்டு சிறிய பௌத்த பீடங்களின் மகா நாயக்கர்கள் தமது அறிக்கையில் ஒரு புதிய யாப்பே தேவை என்று கேட்டிருந்தார்கள். கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் அவ்வாறே கேட்டிருந்தது.

அவாறான ஒரு அரசியற் சூழலில் தாங்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக ராஜபக்ஷக்கள் வெளிப்படையாக, தெளிவாக அறிவித்தார்கள். இப்பொழுது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்தும் ஆர்வமாக இருப்பதாக ஒரு தோற்றம் காட்டப்படுகிறது.

புதிய யாப்புக்கான தீர்வு  முன்மொழிவுகளை வழங்குமாறு நாட்டில் உள்ள அனைத்து தரப்புக்களிடமும் கேட்கப்பட்டுள்ளது. இதற்குரிய கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதுவிடயத்தில் ஒரு அடிப்படைக் கேள்வியை முதலில் எழுப்ப வேண்டும். ராஜபக்ஷக்கள் ஒரு தீர்வைக் கொண்டுவர விசுவாசமாக முயற்சிக்கிறார்களா? அல்லது அது இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் திசை திருப்பும் உத்தியா?

அவ்வாறு சிந்திப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது நிலைமாறுகால நீதிக்குரிய ஐ.நா. தீர்மானத்தை ராஜபக்ஷக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவிட்டார்கள் ஆனால், நிலைமாறுகால நீதியின் கீழ் ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய மூன்று பிரதான கட்டமைப்புகளை கலைக்காமல் வைத்திருக்கிறார்கள்.

புதிய யாப்பு உருவாக்கமும் அப்படித்தான் நிலைமாறுகால நீதியின் நான்காவது தூண் (Non Reoccurrence). அதாவது, மீள நிகழாமை. அதன்படி ஒரு நாட்டில் உள்நாட்டு மோதல்களுக்குப் பின்னர், அந்த மோதல்களுக்குக் காரணமாக இருக்கும் அடிப்படைக் காரணியை அகற்றும் விதத்தில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வது, அதன்மூலம் அம்மோதல்கள் மீள நிகழாமல் தடுப்பதாகும்.

இந்த அடிப்படையில் நிலை மாறுகால நீதிக்குரிய ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணிலின் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது. அம்முயற்சியானது யாப்புருவாக்கத்திற்கான ஒரு இடைக்கால அறிக்கை வரை முன்னேறியது.

அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னரே மைத்திரிபால சிறிசேன 2018 ஒக்டோபர் மாதம் ஆட்சியைக் குழப்பினார். எனவே, இலங்கைத் தீவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு ஓர் இடைக்கால அறிக்கை வரை முன்னேறியிருந்தன.

அப்படியென்றால் அந்த இடைக்கால அறிக்கையில் இருந்துதானே ராஜபக்ஷக்கள் தொடங்க வேண்டும்? ஆனால், அவர்கள் அவ்வாறு தொடங்கத் தயாரில்லை என்பதைத்தான் யாப்புருவாக்க முயற்சிகளை அவர்கள் புதிதாகத் தொடங்கியது காட்டுகிறது.

ஆனால், இதில் அனைத்துலக தராதரம் பேணப்படவில்லை. யாப்புருவாக்கத்தைப் பொறுத்தவரை ஆயுத மோதல்களுக்குப் பின்னரான சமூகங்களில் ஒரு பொதுவான வழமை பின்பற்றப்படுவதுண்டு. யாப்புருவாக்கத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்படும். அதன்கீழ் யாப்புருவாக்கத்திற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும்.

அதோடு புதிய யாப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிவதற்கும் மேலிருந்து கீழ்நோக்கிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். பொதுமக்களின் கருத்தைத் திரட்டுவதற்கு போதிய அளவுகால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்த ஏற்பாடுகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்தது. நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றி அதில் யாப்புருவாக்கத்துக்கான வழிநடத்தற் குழுவையும் அதன்கீழ் ஏனைய உப குழுக்களையும் ரணில் உருவாக்கினார்.

அதோடு, மக்கள் கருத்தறிவதற்கென மாவட்டங்கள் தோறும் கருத்தறியும் செயலணிகளையும் உருவாக்கினார். எனினும், அது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உண்டு.

தென்னாபிரிக்க, கிழக்குத் திமோரிய முன்னுதாரணங்களைாப் போல இலங்கை தீவில் மக்கள் கருத்தறியும் நடைமுறைக்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், இதே குற்றச்சாட்டு தென்னாப்பிரிக்காவிலும் உண்டு.  கிழக்கு திமோரிலும் உண்டு.

தென்னாபிரிக்காவில்  இது போன்ற ஒரு நடைமுறையின் கீழ் ஆயிரக்கணக்கான கூட்டங்களும் பல்லாயிரக்கணக்கான முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டன. ஆனால், இலங்கைத் தீவில் நிலைமை அப்படியல்ல. எனினும், ரணில் விக்ரமசிங்க ஒரு புதிய யாப்புக்கான நடவடிக்கைகளை ஒரு இடைக்கால அறிக்கைவரை முன்கொண்டு வந்தார்.

இப்பொழுது, ராஜபக்ஷக்களின் அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க விட்ட இடத்திலிருந்து தொடங்கத் தயாரில்லை. இரு மாத கால அவகாசத்திற்குள் பொது மக்கள் கருத்தை அறியப் போவதாக அறிவித்திருக்கிறது. தவிர கட்சிகளிடமிருந்தும் யோசனைகளைக் கேட்கப்பட்டிருக்கிறது.

இது விடயத்தில் உலகம் பூராகவும் யாப்பியல் நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளை ராஜபக்ஷக்கள் பின்பற்றத் தயாரில்லை. மோதலுக்குப் பின்னரான சமூகங்களில் யாப்புருவாக்கம் எனப்படுவது நல்லிணக்கப் பொறிமுறையின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதிதான்.

ஏன் ஒரு புதிய யாப்பு தேவைப்படுகிறது? பழைய யாப்பு இலங்கை தீவை ஒரு தேசமாகக் கட்டி எழுப்பத் தவறிவிட்டது என்பதனால்தானே? எனவே, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் பொழுது தேச நிர்மாணம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எப்படி ஒரு பல்லின, பல்சமயத் தேசத்தை நிர்மாணிப்பது என்று சிந்தித்தால் அங்கே நல்லிணக்கத்தை தவிர வேறு எந்த வழியும் கிடையாது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு பொறிமுறையின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகத்தான் புதிய யாப்பை உருவாக்க வேண்டும். ஆனால், ராஜபக்ஷக்களிடம் அப்படியான தரிசனங்கள் எதுவும் இல்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டு கால அவர்களுடைய ஆட்சி நிரூபித்திருக்கிறது.

எனவே, நல்லிணக்கத்துக்கான எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு ஒரு புதிய யாப்பை உருவாக்குவது என்பதே அடிப்படைத் தவறு. அதனால்தான் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்புருவாக்கப் பொறிமுறைகள் எதனையும் இந்த அரசாங்கம் பின்பற்றவில்லை.

இப்படிபட்ட ஒரு அரசியல் பின்னணியில் தமிழ்த் தரப்பு இந்த நிலைமையை எப்படி எதிர்கொள்ளலாம்? இது ஒரு பொறி முறை என்பதை விடவும் தமிழ் தரப்புக்கு இது ஒரு பொறியும்கூட. இந்தப் பொறியை தமிழ் தரப்பு ராஜபக்ஷக்களுக்கான ஒரு பொறியாக மாற்றுவதே ஒரே வழி.

எனவே, இந்தப் பொறியை பொறி வைத்தவர்களுக்கே பொறியாக மாற்றும் விதத்தில் தமிழ்த் தரப்பு ஓரணியாகத் திரண்டு ஒரு பொது கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட யாப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டும். அது ஒன்றுதான் தங்களுக்கு வைக்கப்பட்ட ஒரு பொறியை பொறி வைத்தவர்களுக்கே பொறியாக மாற்ற உதவும்.

அதாவது, ராஜபக்ஷக்கள் பல்லின, பல்சமைய சமூகம் ஒன்றைக் கட்டி எழுப்புவதற்குரிய ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தயாரில்லை என்பதை உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும். மாறாக ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான யோசனையை முன்வைத்தால் அது சிதறிப் போய் பொறிக்குள் விழும் முயற்சியாகவே அமைந்துவிடும்.

கிடைக்கும் தகவல்களின்படி கூட்டமைப்பு மூத்த சட்டத்தரணி கனகேஸ்வரனின் தலைமையில் ஒரு யாப்பைத் தயாரிப்பதாகத் தெரிகிறது. அதுபோல, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு தீர்வு முன்மொழிவை தயாரித்திருக்கிறது. விக்னேஸ்வரன் அதற்கென்று ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி இருக்கிறார். மாவை முன்னெடுக்கும் கட்சிகளின் கூட்டும் ஒரு குழுவை நியமித்திருக்கிறது. மட்டக்களப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா ஒரு முன்மொழிவை தயாரித்திருக்கிறார். சில தமிழ் அமைப்புக்களும் முன் மொழிவுகளை தயாரித்து வருகின்றன. இவற்றுடன் புலம் பெயர்ந்த தமித் தரப்புக்கள் சிலவும் முன்மொழிவுகளை அனுப்பவிருக்கின்றன.

அதாவது, தமிழ் தரப்பு ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தை ஒருமித்து எதிர்கொள்ளப் போவதில்லை என்றே தெரிகிறது. இதை இன்னும் கூராகச் சொன்னால் பொறிக்குள் விழப்போகிறது என்று பொருளா?