அமெரிக்காவிடம் கடும் நிபந்தனை: சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை – அ.நிக்ஸன்

ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறந்த தலைவர் என்ற தொனியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்து வருகிறார்.

இலங்கைத் தீவில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற சொல்லாடல் மூலம் அதாவது தமிழ், முஸ்லிம் மக்கள் என்று குறிப்பிடாமல் சிறுபான்மை மக்களின் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக்கூடிய வகையில் கோட்டாபயவுடன் பேச்சு நடத்த முடியும் என்ற கருத்தை ஜெஹான் பெரேரா முன்வைக்கிறார்.

சமதானப் பேரவையின் இணையத்தளத்திலும் சமூகவலைத்தளத்திலும் ராஜபக்ச அரசாங்கம் தொடர்பாக ஜெஹான் பெரேரா எழுதியுள்ள விடயங்கள், கோட்டபாய ராஜபக்சவின் அல்லது 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடத்தப்பட்ட இறுதிப் போர், ஜனநாயக விரோத செயற்பாடுகள், மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள், குறித்த விமர்சனங்களைத் தவிர்த்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சி பற்றிய செயல்திறன்கள் பற்றியே அவர் புகழாரம் சூட்டுகிறார்.

2002இல் இருந்து சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்ற காலத்தில் பேராசிரியர் றொஹான் குணரட்ன முன்வைத்த இனவாதக் கருத்துக்களைக் கண்டித்துத் தன்தை சிங்கள மிதவாதியாகவும், சமாதானத்தை உருவாக்க முற்படுபவராகவும் காண்பித்திருந்த ஜெஹான் பெரோரா, தற்போது றொகான் குணரட்னவின் செயற்பாடுகளை ஒத்த அரசியல் வேலைத் திட்டங்களில் ஈடுபடுகிறார் என்பதையே சமீபத்தில் அவர் வெளியிடும் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பது என்ற போர்வையில் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டு வரும் பேராசிரியர் றொஹான் குணரட்ன, 2006ஆம் ஆண்டில் இருந்து போரை நடத்துவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறப்பு ஆலோசகராக விளங்கியிருந்தார். தற்போது ஜனாதிபதியான பின்னரும் அவர் ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். அன்று இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஆதரவுகளை றொகான் குணரட்ன மேற்கொண்டிருந்தார்.

ஆனால் இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எற்பட்டிருந்த அவப் பெயரை நீக்கி, இலங்கை ஓர் ஜனநாயக நாடு, மனித உரிமைகளைப் பேணும் நாடு என்ற தோற்றப்பாடுகளைக் காண்பிக்கத் தற்போது ஜெகான் பெரேரா முற்படுகிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.

றொஹான் குணரட்ன போன்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளோடு முரண்பட்டிருந்த ஜெகான் பெரேரா 2019ஆம் ஆண்டுக்குப் பின்னரான ராஜபக்சக்களின் ஆட்சியைப் புனிதப்படுத்தும் வேலைத் திட்டங்களில் இறங்கியிருப்பது, அதுவும் புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சித்துக் கொண்டு கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் கருத்து வெளிப்பாடுகள் என்பது, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பயங்கரவாத கோசமாகப் பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் அமைந்ததாகவே நோக்க முடிகின்றது.

கடந்த நவம்பர் மாதம் சண்டே ஒப்சேவர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் நேர்காணல் வழங்கியிருந்த பேரசிரியர் றொஹான் குணரட்ன, விடுதலைப் புலிகளை ஐக்கிய நாடுகள் சபை தடை செய்ய வேண்டுதென்ற தீர்மானத்தை இலங்கை முன்வைக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

வடக்குக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் ஆண்டுதோறும் இடம்பெறும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், சிவப்பு, மஞ்சள் கொடிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமெனவும் றொஹான் குணரட்ன அந்த வலியுறுத்தியிருந்தார். அமெரிக்க அரசின் நீதித்துறைக்கு ஆலோசகராகப் பதவி வகித்திருந்த றொஹான் குணரட்ன, இவ்வாறான ஆலோசனைகளை முன்வைக்கும்போது, நிச்சயமாக ஐ.நா அதனை ஏற்கும் நிலையுண்டு.

காரணம் எதுவுமேயின்றி இந்தியாவதைத் திருப்பித்திப்படுத்தும் நோக்கில் 1997ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா தடைவிதித்திருந்தது. அந்தத் தடை இன்றுவரை நீடிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் அதுவும் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சூழலில், ஐ.நா புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார் றொஹான் குணரட்ன.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், 1996ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த தீர்வுப் பொதியை புலிகள் குழப்பியடித்தனர் என்றும் இல்லையேல் அன்றே இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்ற தொனியிலும் ஜெஹான் பெரேரா சமூகவலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.

ஆகவே 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள மிதவாதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பலர், கோட்டபய ஜனாதிபதியான பின்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாப்புகளையும் அதன் சட்டங்களையும் பாதுகாக்க முற்படுகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளோடு இலங்கை உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கை மையம், தேசிய சமாதானப் பேரவை போன்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

2002ஆம் ஆண்டு சமதானப் பேச்சுக்கள் நடைபெற்ற போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சமதானப் பேச்சுக்கான முன்னோடியாகவும் தன்னைக் காண்பித்திருந்த மிலிந்த மொறகொட, இன்று ராஜபக்ஷக்களின் விசுவாசியாகவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் பதவி வகிக்கிறார். இந்த மிலிந்த மொறகொடதான், இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் ஆலோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.