பொதுஜன பெரமுன அதிகாரத்தை கைப்பற்றியபோது இலங்கை அதிகளவான கடனில் மூழ்கியிருந்தது: பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் இலங்கை நாடு என்ற வகையில் அதிகளவான கடனை பெற்று இருந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேலையுடன் மீண்டும் கிராமத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டத்தின் சப்ரகமுவை மாகாணத்திற்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எம்மை போன்றே நிதியுதவி வழங்கும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், கடந்த காலத்தை போன்று இலகுவாக எம்மால் கடனை பெறமுடியவில்லை. வெளிநாட்டு கடனை எடுத்துக்கொண்டால், நாங்கள் நாட்டை பொறுப்பேற்ற போது ஒரு நாடு பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகளவான கடன் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மூக்கு வரை தண்ணீர் சென்ற நிலைமையே காணப்பட்டது.

நாடு என்ற வகையில் கடன் தவணையை செலுத்த முடியாது வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிப்பார்கள் என்ற விருப்பத்தில் சிலர் இருந்தனர்.

பல்வேறு வரையறை, கட்டுப்பாடுகளை விதித்து, சில சிரமங்களுக்கு மத்தியில் கடனை செலுத்தி, முழுமையாக கடனை செலுத்தும் சிறந்த நாடாக மாற முடிந்தமை குறித்து விசேடமாக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

கடன் தரப்படுத்தல்களில் கீழ் மட்டத்திற்கு தரப்படுத்தினாலும் நாங்கள் வலுவான பொருளாதாரத்தை ஒருமட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.