முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசின் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கப்படாதிருப்பது குறித்து அதிருப்தி கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனைப் பொகவந்தலாவையில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த விவகாரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றோம்.
கடந்த காலங்களாக எழுந்த இந்தச் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்படும் என்று நம்புகின்றோம்” – என்றார்.