சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின்மீன்கள் மனித பாவனைக்கு உதவாதவை மீள ஏற்றுமதி!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, மனித நுகர்வுக்கு உதவாத தகரத்திலடைக்கப்பட்ட மீன் ரின்களின் 48 கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய, இலங்கை சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுங்கத் திணைக்கள பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

சுங்கத் திணைக்கள நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினால் இன்று (17) முதல் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

768 மெற்ரிக் தொன் எடை கொண்ட இவற்றின் பெறுமதி ரூ. 384 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பழுதடைந்து ஆர்சனிக் (Arsenic) கலப்புற்ற நிலையில் காணப்படும் இவை, மனித நுகர்வுக்கு ஏற்றதாக இல்லை என, இலங்கையின் தர நிர்ணய நிறுவனத்தினால் (SLS 591 : 2014) அளவீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கொள்கலன்களும் இம்மாத இறுதிக்குள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.