மஹர சிறைச்சாலை கலவரங்களுக்களின் பின்னணியிலிருந்தது யார்? பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்கள்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமான பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அண்மையில் கம்பஹா – மஹர சிறையில் இடம்பெற்ற கலவரத்தின்போது 11 கைதிகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இதுகுறித்து தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு துரித விசாரணைகளை நடத்திவருவதாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

மஹர சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்து விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதுவரை 334 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 35 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன்படி சிறைச்சாலை அதிகாரிகள் 107 பேர், 147 கைதிகள், மருத்துவர்கள் 09 பேர் மற்றும் தாதியர்கள் 17 பேர் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசேடமாக ஆரம்பத்தில் இதுபோன்ற கலவரத்தை தூண்டியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வெகுவிரைவில் நீதிமன்றத்தில் இவர்கள் குறித்த தகவல்களை காட்சிப்படுத்தவுள்ளோம். இந்த கலவரத்தில் உயிரிழந்த 11 பேரும் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 பேரது மரண விசாரணைகள் முடிந்துள்ளன. அதன் அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளன.

சடலங்களின் இறுதிக்கிரியை குறித்து நீதிமன்றமே அறிவிக்கும். இந்த கலவரத்திற்கு தலைமையதாங்கிய, தூண்டியவர்கள் பற்றிய விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திவருகின்றதுடன், மரணங்கள் குறித்த தீர்மானங்களை நீதிமன்றம் எடுக்கும் என்றார்.