கச்சைதீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

இராமேஸ்வரத்திலிருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி அனுமதி பெற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் இன்றுமாலை 2 மணி அளவில் கச்சை தீவுக்கும், நெடுந்தீவுக்கும் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு சுமார் 6க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் வந்துள்ளன.

இதனையடுத்து மீனவர்களை அப் பகுதியில் மீன்பிடிக்க விடாமல் எச்சரித்து விரட்டியடித்துள்ளனர்.

அப்போது மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை குறித்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய விசைப்படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களை அழித்து வருவதாக இலங்கை மீனவர்களின் காணொளி அதரங்களுடன் புகார் கொடுத்ததையடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பிலிருந்து உயர் அதிகாரிகளின் உத்தரவிற்குப் பின் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அல்லது கொரோனோ சோதனை நடத்தி சிறையில் அடைக்கப்படுவார்களா என்ற தகவல் தெரியவரும் என்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக மீனவர்களுக்குத் தெரிய வந்ததையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அச்சத்தோடு கரை திரும்பியுள்ளனர்.

இதனால் துறைமுகத்தில் பரபரப்பும் பதற்ற நிலை ஏற்பட்டது. மேலும் கரை திரும்பிய மீனவர்களிடம் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடல் முழுவதும் இலங்கை இராணுவ கப்பல்கள் அணிவகுத்து நின்று அச்சுறுத்துவதாகக் கரை திரும்பியவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலால் நாளை இராமேஸ்வரத்தில் அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் அவசர ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதில் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் பிரச்சனையின்றி மீன்பிடிக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.