கொரோனா மருந்துகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத எந்தவொரு மருந்தையும் கொரோனா தொற்றுக்கான மருந்து எனக் கருதி அருந்த வேண்டாம் என இலங்கையில் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஆராய்ச்சி கழகம் இதற்கான அறிவித்தலை விடுத்திருக்கிறது.

தற்போது நிலையில் தமது ஆராய்ச்சி கழகத்தில் மூன்று மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய ஆராய்ச்சி கழகம் தெரிவித்திருக்கிறது.

இதனடிப்படையில் மருத்துவரான தம்மிக்க பண்டாரவின் ஆயுர்வேத மருந்தும் அடங்குவதாக ஆராய்ச்சி கழகம் தெரிவித்திருக்கிறது.

சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார தயாரித்துள்ளதாக கூறப்படும் இந்த கொரோனா தொற்று மருந்தை அண்மையலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட்ட அமைச்சர்களும், நாடாளுமன்றத்தின் சபாநாயகர் உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அருந்திய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

 

இந்த நிலையில் தம்மிக்க பண்டாரவினால் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக கேகாலை – ஹெட்டிமுல்லையில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளையும் புறந்தள்ளி ஒன்றுகூடியிருந்தனர்.

இதனையடுத்து தற்போது ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் சேனானி ஹேமந்த தமது அறிவித்தலை விடுத்திருக்கிறார்.

தமது நிறுவனம் உறுதிப்படுத்தும்வரை எந்த ஒரு மருந்தையும் கொரோனா வைரஸ் குணமாக்கி என கருதி மக்கள் அருந்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை சுதேச மருத்துவராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தம்மிக்க பண்டார தேசிய சுகாதார துறையில் ஒரு வைத்தியராக பதிவு செய்திருக்கவில்லை என ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.