சிங்களவர்களுக்கு எதிராக பேசாதீர் சரத்வீரசேகர- தமிழ் எம்.பிக்களுக்கு எச்சரிக்கை

சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாட்டு தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதிலாக ஏன் அவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது? என்ற கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,

அது தவறு, ஏனென்றால் அவர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது.

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன், அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.

விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார். அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார்.

பாதுகாப்பிற்கு அளிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது.

அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார் என்றார்.