இலங்கை தொடர்பான அமெரிக்க இந்திய அணுகுமுறையும் ஈழத் தமிழர்களும் -அ.நிக்ஸன்

இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அரசு அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டுமென்ற ஆழமான கடினமாக பரிந்துரை ஒன்றை இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முன்வைத்திருக்கிறார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் முக்கியமாக மூன்று விடயங்கள் உள்ளடங்கியிருந்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்று கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, (Maritime Domain Awareness) (MDA) அதாவது இலங்கைக் கடற்படை வைத்திருக்கும் ராடர்கள் இந்தியக் கடற்படையின் ராடர்களில் தெரிய வேண்டும் என்பது. இரு நாடுகளும் ஒரே மாதிரியான ராடர் செயற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கிலானது.

இரண்டாவது பாக்கிஸ்தான் தவிர்ந்த இந்தியப் பொருங்கடலை மையப்படுத்திய பிராந்திய ஒத்துழைப்பு (Indian Ocean Rim Association) (IORA) அதாவது வர்த்தக ரீதியான செயற்பாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளை ஊக்குவித்தல தொடர்பான விவகாரங்களில் இலங்கையின் பங்களிப்பு.

முன்றாவது கொழும்பு கிழக்குத்துறைமுக கிழக்கு முனைய கொள்கலன் இறங்கு துறை அபிவிருத்தி.

அதாவது இந்திய, ஜப்பான், இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றினைந்து மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தல்இந்த மூன்று விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை ழுமுமையான ஒத்துழைப்பை வழங்குமென அஜித் டோவால் புதுடில்லியில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் சந்திப்பை முடித்துக் கொண்டு புதுடில்லிக்குச் சென்ற அவர், இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் பங்களிப்புத் தொடர்பான உறுதிப்பாடுகளை பிரதமர் நரேந்திரமோடியிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே இந்தியச் செய்தியாளர்களிடம் விபரமாகக் கூறியிருக்கிறார்.குறிப்பாக கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய கொள்கலன் அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடமே ஒப்படைக்கப்படும். அந்த விடயத்தில் இலங்கையிடம் மாற்றுக் கருத்தில்லை எனவும் ஜெயநாத் கொலம்பகே உறுதியாகக் கூறிருக்கிறார்.

ஆகவே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்திய அமெரிக்க நலன்சார்ந்தும் செயற்படும் என்பது வெளிப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார விடயங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படுவதை இந்தியாவோ அமெரிக்காவோ எதிர்க்காது என்ற நம்பிக்கையும் இலங்கைக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற போதும்கூட இந்த நம்பிக்கையை அமெரிக்காவிடம் இருந்து பெற்றிருந்தது.

ஆனால் இலங்கையின் இறைமை சீனாவிடம் அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாதென்ற எச்சரிக்கையும் மைக் பொம்பியோவினால் கொழும்பில் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த எச்சரிக்கையை கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்காக புதியதொரு மாற்றமாகவே கருதியிருக்க வேண்டும்.ஏனெனில் மாலைதீவு அரசு அமெரிக்க, இந்திய அரசுகளின் நலன்களையே முதன்மைக் கொள்கையாக வகுத்துள்ளது.

அப்படியொரு முதன்மைக் கொள்கை ஒன்றை இலங்கையும் வகுக்க வேண்டுமென அமெரிக்காவோ இந்தியாவோ இலங்கையிடம் கேட்டதாகத் தெரியவில்லை. மாலைதீவு ஜனாதிபதி சோலீ இப்ராஹிம் அரசாங்கத்தின் கீழ் மாலைதீவு அதன் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை ‘இந்தியா முதலில்’ என்ற அடிப்படையில் அமையும் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. நரேந்திரமோடி இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற அடுத்த சில நாட்களில் மாலைதீவுக்குச் சென்றிருந்தார். அதன் பின்னரே அவ்வாறான கொள்கை ஒன்றை மாலைதீவு வகுத்ததெனலாம்.

இலங்கைக்கும் நரேந்திர மோடி வந்தபோது, மாலைதீவு அரசின் முன்மாதிரி பற்றிக் கூறப்பட்டிருந்தது, ஆனால் இந்தியா முதலில் என்ற அணுகுமுறை உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெறமுடியவில்லை. இந்தியாவுக்கும் அப்படியொரு உத்தரவாதம் இலங்கையிடம் இருந்து உடனடியாகத் தேவைப்பட்டிருக்கவும் இல்லை.

ஏனெனில் MDA எனப்படும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு Ioro எனப்படும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை செயற்பட்டாலே போதும் என்ற நோக்கு இந்தியாவிடம் இருந்தது.

ஆகவே இந்திய அமெரிக்க அரசுகளின் இலங்கை தொடர்பான இந்த அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைக்குப் பொருத்தமானதாகவும். இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் என்பதை நிலைநிறுத்த அது வாய்ப்பாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமெனவும் இலங்கை நம்புகின்றது. அத்துடன் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களையும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கள் உள்ளடக்கிவிடலாமெனவும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

மைக் பொம்பியோ கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பேராநிரியர் ஜெயநாத் கொலம்பகே சீனாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் லுவோ ஷேhஹய் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களைத் துரிதப்படுதுவதற்கும் வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் சீனாவும் இலங்கையும் தீர்மானித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.