புலிகளை அழித்ததைப்போன்று கூட்டமைப்பையும் அழிக்க வேண்டும்” சரத் வீரசேகரவின் கருத்துக்கு மாவை பதிலடி

விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டிருக்கும் அவர் இவ்வாறு இறுமாப்புடன் பேசுவது நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு கூட்டமைப்பே பொறுப்புக்கூற வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவருடைய கருத்து தொடர்பில் மாவை சேனாதிராஜா மேலும் கூறியதாவது:

சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும். அவர் உலக வரலாற்றை அறியாமல் பேசுகின்றார். உலகநாடுகள் பலவற்றிலும் விடுதலைக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பல போராட்டங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தமிழர்களின் அமைதிவழிப்போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப்போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக இந்நாட்டில் வளர்ந்தார்கள்.

எனவே தமிழ்மக்களின் விடுதலை உணர்வினையும் கொள்கையினையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசாங்கங்களினாலும் அழித்துவிடமுடியாது. தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர, விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றார்.