ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுகிறது- நிரோஷன்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று ( சனிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த குழுநிலை விவாதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு கொரோனா மட்டுமன்றி, ஈஸ்டர் தாக்குதலும் பிரதானக் காரணமாக இருக்கிறது.

இதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும், கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை, இந்த விசாரணை தொடர்பாக கவலை வெளியிட்டிருந்தார்.இதனை அரசாங்கம் மூடி மறைத்துவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு அமர்த்தினார்கள்.

எனினும், தேர்தல் காலத்தின்போது கூறிய வேகத்தைவிட அரசாங்கம் தற்போது குறைவாகவே செல்கிறது என்பதே மக்களின் பொதுவான நிலைப்பாடாக இருக்கிறது.

அரசியல் அழுத்தங்கள் இன்றி இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதுதான் பேராயர் உள்ளிட்ட அனைவரதும் கோரிக்கையாகும்.

இதனை நாம் அரசியலாக கருதவில்லை. இதனை வைத்து எவரும் அரசியல் செய்யவும் முற்படக்கூடாது. எனினும், யார் இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னணி என்ற உண்மை தெரியவேண்டும். இது ஒன்றுதான் எமது நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.