இலங்கை சிறைச்சாலைகளில் தொடரும் படுகொலைகள்! வேலியே பயிரை மேயும் கதை

வெலிக்கட சிறைச்சாலை சுவரில் எழுதப்பட்டிருப்பதை போல, ”சிறைக் கைதிகளும் மனிதர்களே” எனினும் அவ்வாறு அவர்கள் நடத்தப்படுகின்றார்களா? என்பதே தற்போது இலங்கையர் மனதில் எழுந்துள்ள கேள்வி.

இலங்கையில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் என்றாலே பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

இலங்கையில் நீடித்த யுத்தம், அதன் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் என பாதகாப்புத் தரப்பினர் மீதான ஒருவித அச்சம் முடிவற்ற ஒன்றாகவே தொடர்கிறது.இவ்வாறான சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக சிறைச்செல்லும் நபர்கள், வழக்கு விசாரணைகளுக்கு முன்னதாகவே தண்டனைகளை அனுபவித்த சம்பவங்களும் நிகழ்ந்தேறியுள்ளன.

கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்கள், விசாரணைக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள், கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் என அவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பது நீண்டகாலமாக அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.

இவ்வாறான ஒரு பின்னணியில் மேல் மாகாணம், கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள மஹர சிறைச்சாலையில் கைதிகளின் உயிர்களை பலியெடுத்த வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலை வன்முறைத் தொடர்பிலேயே இலங்கையில் இன்று அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

கடந்த 29ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை மோதலாக மாறியதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியிருந்தனர்.

இதற்கமைய 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளடங்களாக 108 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கும் உயிரிழந்தவர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதுத் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை சிறைச்சாலை நிர்வாகமும், அரசாங்கமும் தெரிவித்து வருகின்ற போதிலும், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கைதிகள், கைதிகளே தாக்கிய சம்வம் அரங்கேறியுள்ளதாகவும், இதற்குக் காரணம் சிறைச்சாலை மருந்தகத்தில் இருந்த சில மருந்துகளை கைதிகள் உட்கொண்டமையே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் “மஹர சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற கொலைகள் குறித்து நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா தெரிவித்திருந்தார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் உட்கொள்ள எவ்வித உணவு இன்றியும், குறைந்த பட்சம் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் வழங்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கைதிகள் உள்ளனர். கூடுதலாக, இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு கடந்த 30ஆம் திகதி வரையில் ஒரு மருந்தேனும் வழங்கப்படவில்லை.” என சுதேஷ் நந்திமால் குறிப்பிட்டுள்ளார்.

”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார குறிப்பிடுவது போன்று, இந்த கைதிகள் ஒரு நிறுவனத்திற்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், அவர்களை அடிமை பணிக்கு அழைத்துச் சென்று, கொரோனாவுடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது எனவும் சுதேஷ் நந்திமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு பக்கங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இணை அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதற்கமைய, மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தலைமையிலான குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, அமைச்சு மட்டத்தில் விசாரணை செய்ய இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் இரண்டாவது குழுவை நியமித்துள்ளார்.

மூன்றாவது குழுவாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நீதி அமைச்சர் நியமித்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டுகிறார்.

இந்த மூன்று விசாரணைகளுக்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவு நான்காவது குழுவாக ஒரு சுயாதீன விசாரணையாக ஆரம்பித்துள்ளது.

மோதலுக்கான காரணங்கள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதே இந்த விசாரணைகளின் நோக்கமென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருந்து களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள சில மருந்துகள் கைதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் சிறைக்குள் இருக்கும் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள கைதிகளாலேயே இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்திற்கு சிக்சையளிக்கப் பயன்படும் மற்றும் மயக்க மருந்துகள் உள்ளிட்ட சுமார் 21,000 மருந்து வில்லைகள் களஞ்சியசாலையில் காணப்பட்டதாகவும், சில கைதிகள் இதனை உட்கொண்டுள்ளதோடு, இதன் காரணமாக சில கைதிகள் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இவ்வளவு தொகை மருந்து வில்லைகள் ஏன் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்காக கைதிகள் களஞ்சியசாலைய உடைத்து மருந்தினை தேடினார்களா? என சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில், மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், எனினும் சட்ட நடைமுறைகளை காரணம்காட்டி இதுத் தொடர்பிலான தகவல்களை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கை சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையிலான மோதல் அல்லது அதிகாரிகளின் தாக்குதல்களினால் கைதிகள் உயிரிழக்கும் சம்பவம் இடம்பெறுவது இது முதன் முறையல்ல என்ற கசக்கும் உண்மையை பதிவு செய்யாமல் இருக்க முடியாது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையே இடம்பெற்ற கடும் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டதுடன் எட்டு சிறைக்காவலர்கள் உட்பட 25 பேர் வரை படுகாயமடைந்தனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கி சூட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு, களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதியொருவர் கடந்த மே மாதம் உயிரிழந்திருந்தார்.

மதிலில் இருந்து கீழே விழுந்து கைதி உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினாலும், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த கைதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு கைதிகள் உயிரிழந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் போகம்பரை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளில் ஒருவர் தப்பிச் செல்ல முயன்று உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு கைதிகள் உயிரிழப்பதும், அதற்கு அதிகாரிகள் காரணம் கூறுவதும் தொடர் கதையாகிப்போன நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக காணப்படுவதோடு, இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமை உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.