வடக்கை புரட்டிப்போட்ட புயலால் இருப்பிடமின்றித் தவிக்கும் மக்கள்! கடற்படைக்கு வேலை கொடுத்த அரச அதிபர்

சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 1403 குடும்பங்களை சேர்ந்த 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்காலிக வீடு முழுமையாகவும், 204 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைதீவு பகுதியில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் 2 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் உணவு வழங்கியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 1403 குடும்பங்களை சேர்ந்த 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்காலிக வீடு முழுமையாகவும், 204 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட 1403 குடும்பங்களிற்கும் உணவு வழங்கும் செயற்பாடுகள் பிரதேச செயலாகங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளையில் நீர் தேங்கி இருக்கும் இடங்கள், தடைப்பட்ட இடங்கள், குளங்களில் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிகள் பொதுமக்கள், பிரதேச சபை, இராணுவத்தினரின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது குளங்களிற்கான நீர் வருகை அதிகரித்தமை காரணமாக சில குளங்கள் நிறைந்துள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து நீரை திறந்து விடுகின்ற போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விடயத்தினை பிரதேச செயலகங்கள் ஊடாக தெளிவுபடுத்தி வருகின்றோம்.

எனவே மக்கள் சீரற்ற காலநிலை ஏற்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானத்தடன் நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற அதேவேளையில், தற்போது உள்ள கொவிட் 19 தொற்று சுழலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.