மஹிந்தவின் வாக்குறுதி போலியானது – நாடாளுமன்றில் பகிரங்க விவாதம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த வாக்குறுதி முற்றிலும் போலியானதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வரவு செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபாவை பிரதமர் அறிவித்திருந்தாலும் அதற்கடுத்த தினமே தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஊடக சந்திப்பை நடத்தி அதனை நிராகரித்துவிட்டது.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வாக்குறுதி என்பது உண்மை என்று தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் அன்றே அவர்கள் பட்டாசுகொழுத்தி ஆரவாரம் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

கடந்த அரசாங்கத்தினால் மலைநாட்டு வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது என்னால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பலதும் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனை அரசாங்கம் முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கொழும்பு உட்பட கொரோனா தொற்று அபாய பிரதேசங்களிலிருந்து மலையகத்திற்கு திரும்புவோர் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.