குற்றம் இழைக்கவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? சரத் வீரசேகரவிற்கு கஜேந்திரகுமார் பதிலடி

யுத்தத்தில் குற்றம் இழைக்கவில்லை எனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மக்களை காப்பாற்றும் பேச்சுவார்த்தையில் பசிலுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.

ஆனால் அந்த மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கூடான பொறுப்புக்கூறலையும், தமிழர்களுக்கான தீர்வைவையும் வலியுறுத்திவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நேற்றைய உரைக்கு பதிலாக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர, இன்று இலங்கை படையினர் குற்றம் எதுவும் இழைக்கவில்லை எனவும் புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்கையில், குற்றம் இழைக்கவில்லை என உறுதியாக நம்பினால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? குற்றமில்லையெனில் விசாரணைக்கு பயமின்றி வரலாமே?

நான் யுத்தகாலத்தில் இங்கே தான் இருந்தேன். இறுதிக்கட்டத்தில் யுத்த வலயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் விடயம் தொடர்பில் இங்கே அமர்ந்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர் பசில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். ஆனால் கடைசியில் அந்த மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்று கூறி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனால் கஜேந்திரகுமாரின் பதிலை அவர்கள் ஒளிபரப்பாது தவிர்த்து விட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.