தமிழின அழிப்பை மறவுங்கள்! தமிழர்களே ஒன்றிணைவோம் – ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ராஜபக்ச குடும்பம்

கடந்த காலத்தை மறந்துவிட்டு தமிழர்கள் எம்முடன் ஒன்றிணையுங்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உலகில் இரண்டு பில்லியன் மக்கள் அதியுச்ச நீர் தட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகில் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்கள் காரணமாக 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியன் மக்கள் அகதிகளாவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும் இந்த அச்சுறுத்தல் உள்ளது. உலக வெப்பமாதல் நிலைமைகளுக்கு நாமும் முகங்கொடுத்து வருகின்றோம். இதில் உலகிலுள்ள 180 நாடுகளில் அதிக அச்சுறுத்தல் கொண்ட பத்து நாடுகளில் இலங்கையும் உள்ளது.

2020 ஆம் ஆண்டில் உலகில் எச்சரிக்கையான காலநிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கையில் நீர் நிலைகளை பாதுகாத்து அதன் மூலமாக குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் என்பதை கூறியாக வேண்டும்.

அதுமட்டுமல்ல இன்று உலகளவில் பரவிக்கொண்டுள்ள கொவிட் -19 வைரஸ் காரணமாக முறையான உணவுகள் கிடைக்காது உலகில் 135 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. இதில் உணவு உற்பத்தியில் நெருக்கடிகளை சந்திக்கும் அபாயமுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளதாக உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே இப்போதே நாம் தேசிய உணவு உற்பத்திகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இல்லையேல் இலங்கையில் 25 வீதமானவர்கள் உயரிய உணவு பற்றாகுறைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும், அதாவது இலங்கையின் சனத்தொகையில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கப்படுகின்றது.

எமது அரசாங்கம் நாட்டின் தேசிய உற்பத்தியில் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. 16 வகையான விதைகளை நாம் குறைந்த விலைகளில் விவசாயிகளுக்கு கொடுத்து சிறு உற்பத்திகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நாமே பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை முன்னெடுத்தாக வேண்டும். வறண்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் குடிநீர் இல்லாது நோய்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வடக்கு மாகாணம் அதிக அச்சுறுத்தலில் உள்ளதென்பதையும் கருத்தில் கொண்டே மன்னார், வடமாராச்சி நீர் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டுள்ளமை சகல மக்களுக்குமான பயன்களை பெற்றுக்கொள்ளவே தவிர எந்தவொரு இனத்தையும் தண்டிக்கவோ நிராகரிக்கவோ அல்ல. சகல மக்களுக்கும் ஒரே மாதிரியான சலுகளை பெற்றுக்கொடுக்க நினைக்கிறோம்.

தமிழர்கள் எமது மக்கள். சகல மக்களுக்கும் இடங்களை பெற்றுக்கொடுப்போம். இதில் ஒரு இனத்திற்கு மட்டும் முன்னுரிமை அல்ல. அவ்வாறு நடந்தவற்றை மறந்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம். யாழ்ப்பாண மக்கள் மிகவும் அதிகமாக கஷ்டப்படுகின்றனர். அவர்களின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற நாம் அனைவரும் ஒன்றினைவோம் என்றார்.

இதேவேளை, சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் :- அமைச்சர் அவர்களே, மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டு இன்று 32 ஆண்டுகலாகின்றது, இன்றுவரை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் தமிழ் மக்களுக்கு ஒரு துண்டு நிலமேனும் கொடுக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக் ஷ:- இவற்றை மறந்து முன்னோக்கி பயணிப்போம், அனைவரும் ஒன்றினைவோம் என்றார்