பழையவற்றை கைவிடுவதற்கு தமிழ் தலைவர்கள் தயார் – லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழ் சமூகம் உட்பட சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் – பழையவற்றை கைவிடுவதற்கு தமிழ் தலைவர்களும், வெளிநாட்டுச் சமூகமும் தன்னிடம் உறுதியளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சிப் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைகளை நடத்த முடியாது உட்பட பல விடயங்களை ஜெனீவா சென்று வாய்மூலம் அரசாங்கம் தெரிவித்தாலும், அவை அங்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார்.

இன்றைய தினம் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது பேசிய அவர்,

மஹிந்த ராஜபக்ஷ அதிகாரப் பரவல் குறித்து உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியலமைப்பு உருவாக்கலில் சிறுபான்மையினரின் பங்களிப்பு இருக்கவில்லை. அதற்கு முன்னரும் இருக்கவில்லை.

ஆனால் நாங்கள் முயற்சித்தபோது அனைவரிடத்திலும் பங்களிப்பு பெறப்பட்டது. ருகுனு உட்பட பண்டைய காலத்து ஆட்சியில் அதிகாரப் பரவல் இருந்தது. அதிகாரப் பரவல் இருப்பது அத்தியாவசியமாகும். அதனூடாகவே ஐக்கியமும் ஏற்படும்.

1940களில் சோல்பரி பிரதிநிதி ஸ்ரீலங்கா வந்தபோது, இந்தியாவைப் போன்ற அதிகாரப் பரவலை வழங்கும்படி வலியுறுத்தியிருந்தார். இந்தியா சுதந்திரம் பெற்றபோது பிராந்திய அதிகாரப் பரவலுக்கு சென்றார்கள். எமது நாட்டிலும் மாகாண அதிகாரப் பரவலுக்கு சென்றிருந்தால் இன்று பிரச்சினை இருந்திருக்காது.

ஐ.நா ஜெனீவா தீர்மானங்களிலிருந்து விலகுவதாக அரசாங்கம் வாய்மூலம் அங்கு சென்று அறிவித்திருந்தாலும் ஒருதலைப்பட்சமாக அதிலிருந்து நழுவிவிட முடியாது.

தற்போதைய பிரதமரான முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர் முடிந்த கையுடன் நாடாளுமன்றத்திற்கு கூட வராமல் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் ஒப்பந்தமொன்றை செய்துகொண்டிருந்தார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் அவை குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என்ற உறுதிமொழியை அதன்போது அவர் வழங்கியிருந்தார். இன்றும் அந்தப் பிரச்சினை ஸ்ரீலங்காவின் கழுத்தை நெருக்குகின்றது.

இவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற 2011ஆம் ஆண்டின் போதும் நிறைவேற்றவில்லை. 2013ஆம் ஆண்டிலும், 2014ஆம் ஆண்டிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எமது நாட்டிற்கெதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2015ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் நாங்கள் பொருளாதாரத்தடை விதிக்கப்படுவதை எதிர்கொண்டிருந்தோம். அதனால்தான் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். பின்னர் ஆட்சிக்குவந்த ரணில் – மைத்திரி அரசாங்கம் சர்வதேசத்துடன் இருந்த தொடர்பினை வலுப்படுத்தியது.

ஆகவே உள்நாட்டு விசாரணைக்கு மஹிந்த இணங்கியிருந்த நிலையில், சர்வதேச விசாரணையின்றி உள்நாட்டு விசாரணையே நல்லது என்பதை வலியுறுத்தினோம். நாங்கள் தான் மின்சாரக் கதிரையிலிருந்து மஹிந்தவை காப்பாற்றினோம். மீண்டும் உள்நாட்டு விசாரணை இப்போது நடக்கின்றதா இல்லையா என்பதை வெளிவிவகார அமைச்சரிடம் கேட்கின்றோம்.

இப்போது பைடன் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா விவகாரம் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததுபோலவே ஆகும் என்கிற எச்சரிக்கை உள்ளது. சில வெளிநாட்டுத் தூதுவர்களை அரசாங்கம் நியமித்திருக்கிறது. வெளிநாட்டு அரங்கத்துடன் மோதுகின்ற, தற்கொலைதாரிகளையே அரசாங்கம் நியமித்துள்ளது.

சீனாவுடன் ஸ்ரீலங்காவின் வர்த்தகம் 1.5 சதவீதமே உள்ளது. இறுதியில் அவர்கள் ஸ்ரீலங்காவிற்கும் கொரோனாவை கொடுத்து விட்டார்கள். சீனாவிடம் கடன்பெற்றிருந்த பொம்வாசாவை இன்று சீனா உரிமைகோரிவிட்டது. இந்நிலையில் போர்ட் சிற்றியின் நிலைமையும் கேள்விக்குறியாகும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் 60 சதவீத வர்த்தக கொடுக்கல் வாங்கலை நடத்துகின்றது.