அதி தீவிர புயலாக வலுப்பெறும் ‘நிவர்’ – முன்னாயத்த நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ள ‘நிவர்’ புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கனமழை இன்றும் தொடர்ந்து பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைகொண்டுள்ள நிவர் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிதீவிர புயலானது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்தும் கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது மழை பெய்துவருவதுடன், சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 150 மில்லிமீற்றர் மழைவீச்சி பதிவாகியுள்ளது.

ஏனைய பகுதிகளில் 120 மில்லிமீற்றர் தொடக்கம் 145 மில்லிமீற்றர் மழைவீச்சி பதிவாகியுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கையாக இந்திய இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.