ஏதோ ஒரு வகையில் நினைவேந்தல் இடம்பெறும்! சாள்ஸ் எம்.பி உறுதி

உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

2019 ஆம் ஆண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, நவம்பர் 16 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டாலும், கடந்த வருடம் மாவீரர்களினுடைய, மாவீரர்களை அடக்கம் செய்த இடங்களுக்கு உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த பெரிய அளவில் தடை விதிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெற இருந்த சூழ்நிலையில், தமிழ் மக்களினுடைய வாக்கினையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் பெரிய அளவில் தடைகள் ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் தற்போது கடந்த மாதம் தியாக தீபம் திலிபனுடைய நினைவேந்தல்களின் போது அவருடைய நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் நீதிமன்ற தடை உத்தரவை எடுத்திருந்தார்கள்.

அதேபோல நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுக்கு கூட இந்த அரசாங்கம் முழுமையான நீதிமன்ற தடை உத்தரவை பிறப்பித்து வருகிறது என்றார்.