கொழும்பில் இதுவரை 6,000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,000மாக அதிகரித்துள்ளது
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இது தொடர்பாக குறிப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,141 பேர் பதிவானதாக குறிப்பிடுகிறது. கம்பஹா மாவட்டத்தில் 5,667 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 610 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் பதிவான வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 327 ஆகும். இதில் 157 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கம்பஹா மாவட்டத்தில் 111 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 3 பேருமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை, அனுராதபுரம், மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்கள் முறையே 2 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தளம், குருநாகல், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர் என கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெலிகட சிறைச்சாலையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 பேர் ஆகும். பொலிஸ் விசேட அதிரடி படையில் 6 பேரும், பொலிஸில் 2 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 2 பேரும் ஏனைய 9 பேரும் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று பதிவாகி உள்ளது.