குரு பெயர்ச்சி 2020- மகரத்தில் சனியுடன் குரு கூட்டணி; நன்மை பெறும் ராசிக்காரர்கள் யார்?

ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர்.

இப்போது திருக்கணித பஞ்சாங்கப்படி மகரம் ராசியில் சனி பகவான் அமர்ந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி வரும் 20ஆம் தேதி நிகழ்கிறது. குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைக்கின்றனர்.

கால புருஷ தத்துவப்படி பத்தாம் இடமான தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானத்தில் கூட்டணி அமைக்கும் குரு, சனியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு நிரந்தர வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் என பார்க்கலாம்.

மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். அரசு வேலையோ? அடிமைத் தொழிலோ சனிபகவான் தயவு நிச்சயம் தேவை. குருவும் சனியும் ஜாதகத்தில் கூட்டணியாக அமைந்திருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

குருபகவான் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக பிரகஸ்பதி என்று அழைக்கப்பட்டார். ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது .

ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார்.

குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர்.

மேஷம்

பத்தாம் வீடு தொழில் ஸ்தானமான மகரம் ராசியில் குருவும் சனியும் கூட்டணி சேருகின்றன. அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு, புரமோசன் தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுடைய முன்னோர்கள் சொத்துக்களில் இருந்து உங்களுக்கு பங்கு கிடைக்கும்.

ரிஷபம்

பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைக்கின்றன. குரு சனி கூட்டணி ஒன்பதாம் இடத்தில் இணைவதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வெளியூர்களில் நடைபெறும் விஷேசங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை மாற்றம் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

மிதுனம்

எட்டாம் வீட்டில் சனி குரு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. வயதானவர்களுக்கு கண் பிரச்சினை, மூட்டுக்களில் வலி வரலாம்.

கடகம்

ஏழாவது இடமான களத்திர ஸ்தானத்தில் சனியும் குருவும் கூட்டணி அமைத்து உங்களுடைய ராசியை நேரடியாக பார்வையிடுகின்றன. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினை வந்தாலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வேலை, தொழில் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்களுடைய கவனம் வேலை, தொழிலில் இருப்பது அவசியம் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சமூகத்திலும் வீட்டிலும் உங்களுடைய மதிப்பு மரியாதை கூடும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். பேச்சில் கவனமாக இருக்கவும்.

சிம்மம்

ஆறாம் வீட்டில் சனி குரு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. நினைத்த காரியம் நிறைவேறும். வேலை தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல மாற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். சட்ட பிரச்சினைகளில் சாதகமான முடிவு வரும். வயிறு, கிட்னி பாகங்களில் சில சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னி

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, குரு கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வரும் காதல் மலரும். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சம்பள உயர்வு வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சம்பளம் கூடும். மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்கும்.

துலாம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனி குரு கூட்டணி அமைத்துள்ளன. இந்த கிரகங்களின் கூட்டணியால் உங்களுக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு வண்டி வாகனம் வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடினமான வேலை செய்பவர்களுக்கு முயற்சியால் நல்ல பலன் கிடைக்கும். கோவில் கும்பாபிஷேம் பணிகளில் ஈடுபடுவீர்கள். மதிப்பு மரியாதை கூடும். நண்பர்கள், உறவினர்களுடன் சண்டை சச்சரவு நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்

மூன்றாவது வீட்டில் சனியும் குருவும் கூட்டணி சேர்வதால் உங்களின் தகவல் தொடர்பு அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். வேலை செய்யும் இடத்தில் அதிக விழிப்புணர்வு அவசியம். வேலையில் புரமோசன் கிடைக்கும் வருமானம் உயரும். சில நேரங்களில் கவனக்குறைவு காரணமாக நல்ல வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும். உறவினர்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு

இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சனியும் குருவும் கூட்டணி அமைத்துள்ளன. அதிக வருமானம் வரும். தொட்டது துலங்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். பேச்சில் கவனமாக இருங்கள். கோபமாக பேசி நஷ்டமடைய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். டென்சனை கண்ட்ரோல் செய்யுங்கள். நீங்கள் சொல்லும் வார்த்தையை பலரும் கேட்கும் காலம் வந்து விட்டது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கூடும்.

மகரம்

உங்களுடைய ராசிக்குள் ஆட்சி பெற்ற சனியோடு நீச்சம் பெற்ற சனி இணைவதால் அதிக உணர்ச்சி வசப்படுவீர்கள். உங்களுடைய வேலைகளில் அதிக கவனம் செலுத்துங்கள் கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பை கொடுங்கள். சம்பள உயர்வும் புரமோசனும் தேடி வரும்.

கும்பம்

12வது இடமான விலைய ஸ்தானத்தில் குருவும் சனியும் கூட்டணி அமைத்துள்ளன. திடீர் செலவுகள் வரலாம். தொழில் முதலீடுகளில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் தேவை. வம்வு வழக்கு விவகாரங்களை கவனமாக கையாளவும். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. மன உளைச்சல் நீங்கும்.

மீனம்

லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் குரு சனி கூட்டணியால் அதிக லாபமும் நன்மைகளும் கிடைக்கப் போகின்றன. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். காதல், திருமணம் உறவுகளில் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள்.