திருகோணமலை சம்பூர் பகுதியில் மரத்தில் தொங்கிய சடலம் – தீவிர விசாரணைகள்

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர்- சம்பூர்-03 பகுதியைச் சேர்ந்த யோகைய்யா நித்தியன் (34 வயது) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

திருமணமாகி 3 மாதங்கள் ஆகிய நிலையில் சம்பூர் பிரதேசத்தில் உள்ள குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா சடலத்தைப் பார்வையிட்டதனை அடுத்து சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி முதல் இன்று வரைக்கும் சம்பூர் பொலிஸ் பிரிவில் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.