வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழர் திடீர் மரணம்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச் சேர்ந்த வேலன் இளையதம்பி (62) என்பவரே இவ்வாறு அவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென மரணமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் வயல் வேலைக்காக பொலன்னறுவைக்கு சென்ற இவர், சுகயீனம் அடைந்ததை தொடர்ந்து தனது வீடு திரும்பியிருந்தார்.

அவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் சம்பவ தினமான நேற்று திடீரென மயக்கமடைந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

தற்பொழுது மரணமானவரின் சடலம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸாரினால் PCR பரிசோதனைக்காக பொதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.