கடைசி வரை விஜய் வரவே இல்லை.. காலையில் இருந்து காத்திருந்து ஏமாந்த நிர்வாகிகள்..

சென்னை: பரபரப்பான சூழலில், இன்று தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது தற்போது ரத்தாகி உள்ளது. காலை 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் இறுதிவரை வந்து சேரவில்லை என்பதால், பண்ணை வீட்டில் நிர்வாகிகள் காத்து கொண்டிருந்தனர்.. தற்போது ஆலோசனை கூட்டம் ரத்து என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாகவே நடிகர் விஜய் விவகாரம் தலைதூக்கி வருகிறது… விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பொதுப்படையான கேள்வி ரசிகர்களிடம் நிலவி வந்தது.

இந்த நேரத்தில் திடீரென, டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர், கட்சிக்கான விண்ணப்பத்தை ரிஜிஸ்டர் செய்தார்.. அதனால் விஜய்தான் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவ… அடுத்த சில நிமிடங்களிலேயே, எஸ்ஏசி அதற்கு விளக்கம் தர.. அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே விஜய் அறிக்கை வெளியாக.. தமிழகத்தையே பெரும் பரபரப்பு சூழ்ந்து கொண்டது.

இதற்கு பிறகுதான் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடந்தது.. விஜய்யும் அவர் அப்பாவும் பேசிக் கொள்வதில்லை என்றும், தனக்கு தெரியாமலேயே தன் கணவர் தன்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாகவும் ஷோபா சொல்ல, ஒரே நாளில் அந்த கட்சி உடைந்தது.. பொருளாளர் ஷோபாவும் ஒரே நாளில் விலகி கொண்டார். இவ்வளவு நடந்தும் ரசிகர்கள் அமைதியாக உள்ளனர்.. பொறுமை காத்து வருகின்றனர்.. விஜய் என்ற மனிதர் மீது அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, குழப்ப மனநிலையில் இருந்தாலும், எந்த அதிருப்தியையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..

விஜய்யே வாயை திறந்து அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிப்பார், தங்களிடம் பேசுவார் என்று நம்பினர்.. அந்த நம்பிக்கையும் இப்போது வீண் போகவில்லை. இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளதாக சொல்லப்பட்டது.. வழக்கமாக பனையூரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில்தான் நிர்வாகிகளை சந்தித்து பேசுவது வழக்கம்.. அதன்படியே இன்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச போவதாக தகவல் வெளியானது.

எதற்காக இந்த சந்திப்பு என்று உடனடியாக தெரியவில்லை.. ஆனால், நிச்சயம் தன் நிலைப்பாட்டை மேலும் ஒருமுறை தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது… இதனால் காலை 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியை கடந்தும் விஜய் அங்கு வராமல் இருந்தார்.. எப்படியும் மதியத்துக்கு மேல் வந்துவிடுவார் என்பதால், நிர்வாகிகளும், ரசிகர்களும் அங்கே திரண்டு காத்திருந்தனர்.. ஆனால், தற்போது ஆலோசனை கூட்டம் ரத்து என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை.