பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளை கழுத்தறுத்து – கொன்றவரின் வாக்குமூலம்

தனது பிள்ளைகள் இருவரையும் ஏன் கழுத்தறுத்து கொன்றேன் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடராஜா நித்தியகுமார்.

நானில்லாத காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் உள்ள தனது வீட்டில் ஏப்ரல் 16ஆம் திகதி மூன்று வயது நிஜிஷ் மற்றும் 19 மாத குழந்தையான பாவின்யா ஆகியோரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, நடராஜா நித்தியாகுமார் (41) தனது கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றிருந்தார். மனைவி நிசாவையும் வெட்ட முயன்றபோது அவர் தப்பித்தார்.

பின்னர் நிஷா பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தைகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், குழந்தைகள் உயிரிழந்தனர். கடுமையான காயமடைந்திருந்த நித்தியாகுமார் சிகிச்சையின் பின் குணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர் நித்தியகுமார். மனைவி நிசாவும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்.

படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமார் குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் (6) அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது, நடராஜா நித்தியாகுமார் மீது மனிதக் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நித்தியகுமார் மனச்சோர்வடைந்துள்ளதாகவும், அவரது வாடிக்கையாளர்களால் “வருத்தப்பட்டதாகவும்” நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் தற்கொலை செய்வதை பற்றி யோசித்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தான் தற்கொலை செய்வது, தனது பிள்ளைகளின் வாழ்க்கையை அழித்துவிடும் என்று நம்பினார். அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என நம்பினார் என தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த தாயார் நிஷா கண்ணீர்விட்டு அழுதார்.

பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாகி விடுவார்கள் என்பதால், இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்று விட்டு, தனது கழுத்தையும் அறுத்துள்ளார்.

மாலை 5.53 மணியளவில் பவின்யா இறந்துவிட்டதாகவும், நிஜிஷ் ரோயல் லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இரவு 7.42 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

நித்தியாகுமார் ஏப்ரல் 29 ஆம் திகதி சிகிச்சை பெற்று வந்தபோது கைது செய்யப்பட்டார்.

அவர் ஒரு மன கோளாறால் அவதிப்பட்டார், ஆனால் “மிகக் குறைந்த சிகிச்சை” பெறுவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி டங்கன்கன் அட்கின்சன்- மனநல நிபுணர் ஒருவரின் அறிக்கையை சமர்ப்பித்து, அவர் சம்பவம் நடந்தபோது என்ன செய்கிறார் என தெரியாமல் நடந்து கொண்டதாகவும், அந்தக் கோளாறுதான் அவரது குழந்தைகளைக் கொல்ல வழிவகுத்தது என்பது தெளிவாகத் தெரிந்தது என்றார்.

தண்டனை வழங்குவதை டிசம்பர் 5ஆம் திகதி வரை நீதிபதி திருமதி ஜஸ்டிஸ் கட்ஸ் ஒத்திவைத்தார். மேலும் மருத்துவமனை உத்தரவை பரிசீலிப்பதாக கூறினார்.

கிழக்கு லண்டனில் உள்ள மனநல மையத்திற்கு நித்தியகுமார் திருப்பி அனுப்பப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.