கொரோனா தொற்றாளர்களுடன் பயணித்தோரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம், வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் பயணித்த பேருந்துகளில் பயணித்தவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு உடனடியாக அறியத்தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

 

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கொழும்பில் இருந்து ஒக்டோபர் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்ற மூவருக்கு கொரோனா தொற்று நேற்றுமுன்தினம் ஒக்டோபர் 30ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த WP NC 8760 இலக்க தனியார் பேருந்தில் ஐப்பசி 25 ம் திகதி இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 26ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.

பின்னர் அவர்களில் இருவர் அதே தினம் அதிகாலை 6.50 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்ட NA 9167 தனியார் பேருந்தில் பயணித்துள்ளனர்.

மேற்படி பேருந்துகளில் இவர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விவரங்களை அறியத்தரவும்.

பயணம் செய்தவர்களின் விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்- என்றுள்ளது.