சீனா – அமெரிக்கா பனிப்போரில் இலங்கை சிக்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது – மகிந்த அமரவீர

சீனா- அமெரிக்காவிற்கு இடையிலான மோதலில் இலங்கை சிக்கிக்கொள்ளாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது எனவும்  அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகை இலங்கைக்கு கிடைத்த பெரும் கௌரவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவே அவர் இலங்கை வந்தார் என மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது சீனாவே பொருளாதார ரீதியில் அதிக வலுவுள்ள நாடு. அமெரிக்காவே சீனாவிடம் கடன் பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்களைப் பொறுத்தவரை மறைப்பதற்கு எதுவுமில்லை. நாங்கள் மைக்பொம்பியோவிடம் வெளிப்படையாகப் பேசினோம், சீனாவின் கடன்பொறியில் இலங்கை சிக்கவில்லை என ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை, இந்த உடன்படிக்கை நல்லது அல்லது மோசமானது என நான் தெரிவிக்கவில்லை ஆராய வேண்டும என்றே தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.