ஸ்ரீலங்காவிற்கான இராஜதந்திர பயணத்தை நிறைவு செய்து விடைபெற்றார் பொம்பியோ!

அமரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ, ஸ்ரீலங்காவிற்கு இராஜதந்திர பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், பயணத்தை நிறைவுசெய்து கொண்டு இன்று பிற்பகல் மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் ஸ்ரீலங்காவில் தங்கியிருந்த நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கூட்டுசெய்தியாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

செய்தியாளா சந்திப்பின் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை மக்களின் வெற்றிகரமான வளர்ச்சியில் நிலைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் சீனா மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜனநாயக, அமைதியான, வளமான, மற்றும் முழு இறையாண்மை கொண்ட இலங்கையுடனான நமது பங்களிப்பை வலுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.

ஒரு வலுவான இறையாண்மை கொண்ட ஸ்ரீலங்கா, உலக அரங்கில் அமெரிக்காவிற்கு ஒரு சக்திவாய்ந்த மூலோபாய பங்காளியாகும். இது ஒரு திறந்த இந்து-பசிபிக் ஒரு களங்கரை விளக்கமாக இருக்கலாம் என்றும் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது சீனாவின் நோக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோசமான உடன்படிக்கைகள், இறையாண்மையை மீறுதல், நிலம் மற்றும் கடலில் சட்டவிரோத அடிப்படையில் சீனாவின் வேட்டையாடும் தன்மையை பார்க்கமுடிகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அது ஸ்ரீலங்காவை ஒரு நண்பராகவும் ஒரு பங்காளியாகவும் கருதுகிறது. இந்தநிலையில் பொறுப்புக் கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அர்த்தமுள்ள, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக ஸ்ரீலங்கா அளித்துள்ள உறுதிமொழிகளை அது நிறைவேற்றும் என்று அமரிக்கா எதிர்பார்ப்பதாகவும் மைக்பொம்பியோதெரிவித்துள்ளார்.