புலிகளின் ஆயுதங்களை தேடிய பொலிஸாருக்கு ஏமாற்றம்!

மட்டக்களப்பு – நவகிரி பாடசாலை வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்களை தேடி பொலிஸார் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையில் எவையும் மீட்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவகிரி பாடசாலை வளாகம் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது முகாமாக செயற்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த பகுதியில் நிலத்தில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதனை தோண்டி சோதனையிட நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

இதற்கமைய களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் பெறப்பட்ட கட்டளைக்கு அமைவாக தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் வெல்லாவெளி பொலிஸார் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை நேற்று மாலைவரை இடம்பெற்றபோதும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.