கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

சிறிலங்காவில் கொரோனாவை கண்டுபிடிக்க வைத்திய வட்டாரங்கள் தேவையில்லை புலனாய்வு பிரிவே கண்டு பிடிக்கும் மிக கேவலம்?

துருக்கியிலிருந்து இலங்கைக்கு வந்த யுக்ரேய்ன் விமானப் பணியாளர்களின் மூலமே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த விடயம் குறித்த புலனாய்வு அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 11ம் திகதி யுக்ரேய்ன் விமானப் பணியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வரும் விமனாப் பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் போது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களினது பணியாளர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.

 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த விமானப் பணியாளர் ஒருவருக்கு கொரோன நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 13ம் திகதி ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஹோட்டல் பணியாளர்களும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த விமானப் பணியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 60 பணியாளர்கள் பணியாற்றியதாகவும் இதில் 18 பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியிடத்திற்கு வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 11 முதல் 13 வரையில் இந்த பணியாளர்களில் 18 பேர் வீடுகளிலிருந்து பணிக்கு சமூகமளித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் வசதியை வழங்கும் ஹோட்டல்களின் பணியாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், ஹோட்டல் நிர்வாகம் குறித்த பணியாளர்களை வீடுகளில் இருந்து பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் வீரியம் 15 முதல் 18 வீதம் வரையிலானது எனவும், புதிதாக கண்டறியப்பட்ட வைரஸின் வீரியம் 29 முதல் 31 வீதம் வரையிலானது எனவும் தெரியவந்துள்ளது.

இந்த ஹோட்டல் பணியாளர்கள், மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்பு பேணியதனால் வைரஸ் தொற்று பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

யுக்ரேய்ன் விமானப் பணியாளர்களின் ஊடாக நோய்த் தொற்று காவிய ஹோட்டல் பணியாளர் ஒருவர் சிலாபத்திலிருந்து நாள் தோறும் பொதுப் போக்குவரத்துச் சேவையை பயன்படுத்தி சீதுவவிற்கு பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையின் முதல் நோய்த் தொற்றாளியின் உடலில், செப்டம்பர் மாதம் 21ம் திகதி நோய்க்குறிகள் தென்பட்ட போதிலும் அவருக்கு செப்டம்பர் மாதம் 16ம் திகதி அளவில் நோய்த் தொற்று பரவியிருக்க வேண்டுமென ஊகிக்கப்படுகின்றது.

இரண்டாவது அலையின் ஊடாக பரவிவரும் வைரஸ் தொற்றின் காவு வீரியம் கடந்த தடவையை விடவும் வலுவானது என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 இரண்டாம் அலை இந்தியாவின் விசாகபட்டினத்திலிருந்து வந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் மூலம் உருவானது என முன்னதாக கூறப்பட்ட போதிலும் இரண்டாம் அலை ஏற்பட்ட போது இந்த விசாகப்பட்டினத்திலிருந்து நாடு திரும்பிய பணியாளர்கள் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.