இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் வலுக்கும் பிரச்சினைகள் -பதவியை துறந்தார் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர்

வடமராட்சி தெற்கு, மேற்கு (கரவெட்டி ) பிரதேச சபையின் தவிசாளர், தங்கவேலாயுதம் ஐங்கரன் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைமைக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் தான் அந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கரவெட்டி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை இன்று காலை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமையகத்துக்கு அழைத்து கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா கலந்துரையாடினார்.

கரவெட்டி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் உறுதியாகத் தெரிவித்தனர்.

எனினும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து உறுப்பினர்களிடம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் வலியுறுத்தினார்.

வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்ற பின்னர் ஒரு மாதத்தில் பதவி விலகுவதாக கட்சித் தலைவரிடம் கூறியிருந்த கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர், தங்கவேலாயுதம் ஐங்கரன் இன்று மாலை தனது முடிவை மாற்றி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.