பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த அல்கொய்தாவின் மூத்த தலைவர் உயிரிழப்பு

பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த அல்கொய்தாவின் மூத்த தலைவரான அபு முஹ்சின் அல் மஸ்ரி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க படையினரால் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் ஆப்கான் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிய தேசிய பாதுகாப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அல்-கொய்தாவின் இரண்டாவது தளபதி என்று நம்பப்படும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த அல்-மஸ்ரி, ஆப்கானின், மத்திய காஸ்னி மாகாணத்தில் நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பணியகம் சனிக்கிழமை தாமதமாக வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் கிறிஸ் மில்லர் ஒரு அறிக்கையில் அல் மஸ்ரியின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

ஹுசாம் அப்துல்-ரவுஃப் என்ற பெயரில் அழைக்கப்படும் அல்-மஸ்ரி மீது, அமெரிக்காவில் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவையும் வளங்களையும் வழங்கியதாகவும், அமெரிக்க நாட்டினரைக் கொல்ல சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரை கைது செய்ய அமெரிக்கா 2018 டிசம்பரில் பிடியாணை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.