2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி!

கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1,050 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் வித்தான தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹாவில் பாதிக்கப்பட்டுள்ள 72000 குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

அரசாங்கத்தினால் நேற்று 400 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அதில் 139 மில்லியன் ரூபாய் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் மீதமுள்ள பணத்தை இன்று மக்களுக்கு வழங்குமாறு கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச பணியில் இல்லாத அனைத்து குடும்பங்களும் இந்த 5000 ரூபாய் நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்னர், அந்தப் பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் அதிகாரப் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் வறியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்தினால் நிதியமைச்சில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.