கொரோனா இ.போ.ச பேருந்தின் சாரதி தனிமைபடுத்தப்படாமல் யாழ்ப்பாணம் – கண்டி சேவையில் ..! சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கை உதாசீனம்.!

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இ.போ.ச பேருந்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் பயணித்த நிலையில் வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனாலும் குறித்த சாரதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் நேற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கு பேருந்து சேவையில் குறித்த சாரதி சேவையில் ஈடுபடுவதாக இ.போ.ச ஊழியர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கும்போது, அண்மையில் இ.போ.ச பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டறிந்த சுகாதார தினைக்களம் வவுனியா சாலை முகாமையாளருக்கு குறித்த கண்டி யாழ்ப்பாண இ.போ.ச, பேருந்து சாரதியை
தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. எனினும் இவ் அறிவுறுத்தல்களை புறம் தள்ளிவிட்டு நேற்று குறித்த பேருந்து சாரதியை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சாலை முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை உதாசீனப்படுத்தி சேவையில் ஈடுபட்டு வருகின்றமையினால் ஏனைய சாரதிகள் நடத்துனர்களும் சாலையில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும்
குறித்த சாரதிக்கு பி.சி.ஆர் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு திரும்பவும் சேவையில் ஈடுபடுத்துமாறு மேலும் தெரிவித்துள்ளனர் .