கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாம் சிப்பாய்களின் பயண விபரம் வெளியானது..!

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரு கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 4ம் திகதி மற்றும் கடந்த மாதம் 27ம் திகதி ஆகிய திகதிகளில் தெற்குக்கு பயணமாகியுள்ளனர்.
இந்த திகதிகளில் குறித்த பொது போக்குவரத்தில் பயணித்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கேட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கொரோனா தொற்றுக்குள்ளான 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு நோக்கி தொடருந்தில் 3ம் வகுப்பு பெட்டியில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர் முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளார்.பின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் தொடருந்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து
இரவு 11 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார்.மேலும் இதே கடற்படை முகாமை சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் செப்ரெம்பர் 27ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.
இவர் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார்.மேற்குறிப்பிட்ட தொடருந்து வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள்
வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.பயணம் செய்தவர்களின் விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கோரோனா தொற்று உள்ளதா
என பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.