பணத்தால் வந்த பிரச்னை? பெண் மருத்துவர் கொலையில் நடந்தது என்ன?

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் சோனா (30). இவர் கூத்தாட்டுக்குளம் அருகேயுள்ள கூட்டநெல்லூர் பகுதியில் கிளினிக் நடத்திவந்தார்.

ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவர் வசதிபடைத்தவர் என்பதை அறிந்த பாவறட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சோனாவிடம் நெருங்கிப் பழகினார். இவர்களது பழக்கம் நட்பாக மாறியது. மகேஷ் அடிக்கடி சோனாவுக்கு உதவுவதுபோல் நடித்து நட்பைக் காதலாக மாற்றியிருக்கிறார்.

சோனாவும் மகேஷை மிகவும் நம்பி அவருடன் நெருக்கமாகப் பழகினார். ஒருகட்டத்தில் திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிது சிறிதாக சுமார் 22 லட்சம் ரூபாய் வரை சோனாவிடமிருந்து மகேஷ் பெற்றிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோனா தனக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி மகேஷிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். பணத்தைத் திருப்பிக் கொடுக்க மகேஷ் மறுத்திருக்கிறார். பலமுறை கேட்டும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், இது குறித்து ஒல்லூர் காவல் நிலையத்தில் சோனா புகாரளித்திருக்கிறார்.

இதை அறிந்த மகேஷ், சோனாவின் கிளினிக்குக்குச் சென்று அவரிடம் தகராறு செய்திருக்கிறார். தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோனாவின் வயிற்றில் குத்தியிருக்கிறார். சோனா ரத்த வெள்ளத்தில் சரியவும், மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

சோனா கத்தியால் குத்தப்பட்டதைப் பார்த்த அந்தப் பகுதியினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சோனாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சோனாவுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சோனா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவான மகேஷை போலீஸார் இன்று காலை திருச்சூர் மாவட்டம், பூங்குன்னம் பகுதியில்வைத்து கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சோனா வசதிபடைத்தவர் என்பதாலும், அவர் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்வது தெரிந்ததாலும் மகேஷ் அவரை நெருங்கியிருக்கிறார். சோனாவிடம் பணம் கறப்பதுதான் மகேஷின் திட்டமாக இருந்திருக்கிறது. இது போன்று வேறு பெண்களிடம் மகேஷ் கைவரிசை காட்டியிருக்கிறாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.