இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: #கஜேந்திரகுமார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் , 20ஆம் திருத்தத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து, அந்த அமைப்பு (29.09.2020) கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேற்படி கருத்தினை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

இந்த நாட்டின் அரசியலமைப்பை கேள்விக்கு உட்படுத்திக்கொண்டு, நிராகரித்துக் கொண்டிருப்பவர்களாகிய நாங்கள் , ஏன் இந்த அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 20 ஆம் திருத்தத்தை எதிர்க்கும் இந்த நிகழ்வில் உங்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் கேள்வி சிலருக்கு எழலாம்.

உண்மையில் தமிழர்களை பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்களுக்கு ஒரு போதும் நேர்மையாக இருந்திருக்கவில்லை.

இந்த நாட்டில் நிறைவேறிய , பெரும்பான்மைத்துவவாதத்தை மையப்படுத்திய மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புகளுமே ,அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஜனநாயக மீறலாகவேதான் அமைந்திருந்தன.

இந்த அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட 17 ம் 19 ம் திருத்த சட்டங்கள் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என சொல்லப்பட்ட போதிலும் உண்மையான நடைமுறையில் தமிழர்களுக்கு எதுவித நீதியும் ஜனநாயகப் பாதுகாப்பும் அதன் மூலம் கிடைத்திருக்கவில்லை என்பது தான் யதார்த்தம்.

எனினும், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளிற்கே ஆபத்தாக விளங்கப்போகும் இந்த இருபதாம் திருத்த சட்டத்தினை எதிர்க்கும் சிங்கள தேசத்தின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி நாமும் தோழமையுடன் இணைந்து கொள்கிறோம்.

அதே போன்று , பெரும்பான்மை சிங்கள இன மக்களும் இந்த தீவின் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை ஏற்று அதை அங்கீகரித்து இந்த தீவில் இருக்கும் அனைத்துத் தேசங்களுக்குமான அங்கீகாரத்தை கொடுக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதை கோரும் ஒரு முன்னெடுப்பாகவே நாம் இதில் கலந்துகொண்டிருக்கிறோம்.

இந்த இலங்கைத்தீவில் தமிழர் தேசமும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்தேசமுடைய நாடாக இருப்பதற்கான புதியதொரு அரசியலமைப்பை கொடுவருவதற்கான ஒரு முன் நடவடிக்கையாக இது அமைய வேண்டும்.

கடந்த 72 வருடமாக, எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டு வந்த சிங்கள அரசுகள், இன்று இந்த 20 ம் திருத்த சட்டத்தின் மூலம் எதுவித கூச்சமும் இன்றி தனது சொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளிலேயே கை வைக்க தொடங்கியிருக்கிறது.

இதை சிங்கள தேசத்து மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்த தீவிலே வாழுகின்ற தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு, கூட்டு உரிமைகளை அங்கீகரித்து, இந்த நாட்டை பல்தேசங்கள் கொண்ட நாடாக அங்கீகரித்து நாம் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நிலையை என்று உருவாக்குகிறீர்களோ, அன்றுதான் உங்களது ஜனநாயக உரிமைகளைக்கூட நீங்கள் உறுதிப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை சிங்கள தேசத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று உங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்ற போது அதற்கு எதிராக நாமும் உங்களுடன் இணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ளோம். அதே போல , நீங்களும் எங்கள் தரப்பு நியாயங்களையும் புரிந்து கொண்டு, உங்கள் கடந்த கால செயல்பாடுகளில் இருந்து மாறி , இந்த இலங்கைத்தீவானது பல் தேசமுடைய நாடாக மாற்றியமைப்பதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

20ம் திருத்ததுக்கு எதிரான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன் அதற்கான எமது பூரண ஆதரவையும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன்.
Mr.Gajendrakumar Ponnambalam:-
(English version of Mr Gajendrakumar ‘s intervention today in Colombo at the launch of the Movement for Social Justice to raise awareness on the 20th Amendment to the Constitution)

“We reject the majoritarian constitution of Sri Lanka and have continued to question the legitimacy of past constitutions. Yet, we oppose the 20th amendment on the basis that it will endanger the democracy of the Sinhala nation.”

“It is incorrect to say that it is the 20th amendment that disenfranchises the Tamil people. Even after the 17th and 19th amendments were introduced supposedly to strengthen democracy, the circumstances of the Tamil people were not altered.”

“The 20th amendment threatens democratic norms within the Sinhala nation itself. After more than 70 years of depriving the democratic rights of other nations on this island, Sinhala leaders have now been empowered to take away rights of their own.”

“People of the Sinhala nation should understand it is only when the collective rights of the Tamil people are recognized and this island acknowledged as a plurinational country, that your own democracy will be safeguarded.”

We hope that by standing in solidarity when the democratic norms and fundamental rights of the Sinhala nation are threatened, the Sinhalese too will reciprocate to recognize our rights.”

“The Sinhala nation should acknowledge all the different nations on this island and recognize fully the rights of the Tamil and the Muslim people.”

“We join this protest in the hope that this is a precursor to recognizing this island as a plurinational country and drawing a constitution recognizing those nations.”