பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட தகுதி காண் காலத்தினுள், உயர்பட்டத் தகைமையைப் பூர்த்தி செய்யத் தவறிய காரணத்தினால், பேராசிரியர் ஒருவரைப் பல்கலைக்கழக சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கும், அவர் வகித்து வந்த பீடாதிபதி பதவியைப் பறிப்பதற்கும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவை தீர்மானித்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள கட்புலக் கலைகள் பல்கலைக்கழகத்தின் (University of the Visual & Performing Arts) பேரவையினாலேயே இத்தகையதொரு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் அபேரத்ன பண்டார தலைமையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு, உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி, பேராசிரியர் சௌமிய லியனகேயை பேராசிரியர் பதவியில் இருந்தும், பீடாதிபதி பதவியில் இருந்தும் இடைநிறுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தாபன விதிக் கோவை, 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபம் ஆகியவற்றுக்கமைவாக, பல்கலைக்கழகங்களில் தகுதி காண் விரிவுரையாளராக நியமனம் பெறும் ஒருவர், தனது பதவிக் காலத்தில், எட்டு வருடங்களுக்குள் உயர் பட்டக் கற்கைத் தகைமையைப் ( முதுமாணி / முது மெய்யியல் மாணி / கலாநிதி) பூர்த்தி செய்தல் வேண்டும். அதற்கமைய நியமனம் பெறும் விரிவுரையாளர் ஒருவருக்கு நியமனம் பெற்றதிலிருந்து, உயர் பட்டக் கற்கைத் தகைமையைப் பூர்த்தி செய்வதற்காக 8 வருட காலம் வழங்கப்படும்.

2007 ஆம் ஆண்டு நியமனம் பெற்றிருந்த கட்புலக் கலைகள் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி, பேராசிரியர் சௌமிய லியனகே, ஆஸ்திரேலியாவின் லா ட்றோப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வைத் தனக்கு வழங்கப்பட்டிருந்த தகுதி காண் காலத்தினுள் – 2015 ஆம் ஆண்டில் சமர்ப்பித்திருந்த போதிலும், அவரது ஆய்வறிக்கை மீதான திருத்தங்கள், ஆலோசனைகளைப் பூர்த்தி செய்து மீள் சமர்ப்பணம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவரது கலாநிதிப் பட்டத்தின் செயற்படு காலம் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட காலத்தினுள் ( 8 வருடங்களில்) அமையவில்லை.

குறித்த காலப்பகுதியினுள் உயர் பட்டக் கற்கைத் தகைமையைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் பல்கலைக்கழகப் பேரவை, பேராசிரியர் சௌமிய லியனகேயை பேராசிரியர் பதவியில் இருந்தும், பீடாதிபதி பதவியில் இருந்தும் இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.