படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா?

நாடே போற்றும் எஸ்.பி.பி, உணர்ச்சிப்பெருக்கில் சந்தோஷ உணர்வில் படுக்கையில் விழுந்து அழுதார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. அப்படி ஒரு சம்பவம் நடந்து

வீரம், காதல், சோகம், நையாண்டி, தத்துவம், துள்ளல் என எல்லா ரசங்களையும் தனது குரலில் வெளிப்படுத்திய எஸ்பிபியின் மரணம் இந்திய மக்களை பெருமளவில் உலுக்கி விட்டது. “அவர் ஒரு ஜீனியஸ்.. அவர் ஒரு சிகரம்”.. என்று சிலாகித்து பேசுகிறார்கள் அவருடன் பணிபுரிந்தவர்களும் பழகியவர்களும், ரசிகர்களும்! அவைகளின் தொகுப்புதான் இது:

“தமிழுக்கு மட்டும் அவரை பிரிச்சு பார்க்க முடியாது.. இந்தியாவின் சொத்து அவர்.. மலையாள உலகை ஜேசுதாஸ்தான் கட்டி ஆண்டு வந்தார்.. அப்போ, கடல் பள்ளம் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமாகிறார்.

படத்தின் மியூசிக் டைரக்டர் தேவராஜனிடம், எஸ்பிபி-யை அறிமுகப்படுத்துவர் ஆர்.கே. சேகர்.. இவர்தான் ஏஆர் ரஹ்மானின் அப்பா.. ஆனால் எஸ்பிபியை பார்த்ததுமே சற்று தயங்குகிறார் தேவராஜன்..

சீனியர்ங்க எல்லாம் இருக்கும்போது, இவரை எப்படி.. என்று ஒரு இழு இழுக்கவும், “பாடினால் இவர் பாடட்டும்… இல்லாட்டி நம்ம மாத்திக்கலாம்” என்று சேகர் கறாராக சொன்னார்.. இதற்கு பிறகுதான் முதன்முதலில் இவரது ரிக்கார்ட்டிங் மலையாளத்தில் நடந்தது.

இதேமாதிரிதான் ஹிந்தியிலும்.. நம்ம பாலு சார் பத்தி பாலச்சந்தருக்கு நல்லா தெரியும்.. அவர் திறமையை பக்கத்துல இருந்து பார்த்தவர்.. அதனால் எப்படியும் தன்னுடைய ஏக்துஜே கேலியே படத்துக்கு எஸ்பிபியை தான் பாட வைக்கணும்னு முடிவெடுத்துட்டார்.

ஆனால், இந்தி உலகமோ, “இவரா? இவருக்கு ஹிந்தி உச்சரிப்பே சரியா இல்லையே” என்று சாக்கு சொன்னபோது, “அட என் ஹீரோவே இந்த படத்துல சரியா இந்தி பேசமாட்டான்… இதுல பாட்டு பாட்றவன் மட்டும் சரியா பேசணுமா? ஒன்னு எஸ்பிபி பாடணும்… இல்லாட்டி வேற டைரக்டரை பாத்துக்கோங்க” என்றார் பாலச்சந்தர். அதற்கு பிறகுதான், ஒரே படத்தில் 5 பாடல்கள் பாடி எல்லாமே ஹிட் ஆக்கினார்.

“சங்கராபரணம்” படத்துக்காக முதல் தேசிய விருதை வாங்கிவிட்டு, “எனக்கு கர்நாடக இசை தெரியாது’ என்று சொன்னபோது, கர்நாடக சங்கீத மேதைகளையே அதிர வெச்சவர்.. 2வது தேசிய விருதினை ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்காக வாங்கியபோது, “எனக்கு இந்தி தெரியாது” என்று சொன்னபோது, பாலிவுட்டே மிரண்டு போயிடுச்சு.

அவரிடம் பணிவுதான் நாங்க பிரம்மிச்சு போய் பார்க்கிறது.. ஸ்டுடியோவிலும் சரி, மேடைகளிலும் சரி, ஆர்க்கெஸ்ட்ராவை சுற்றி பார்த்து, அவங்களுக்கெல்லாம் கையெடுத்து வணக்கம் சொல்லிட்டுதான் பாடவே ஆரம்பிப்பார்..

இதை இப்ப இருக்கிற தலைமுறை எல்லாருமே ஃபாலோ பண்றோம்.. நல்லா வாசிச்சாலும் சரி, பாடினாலும் சரி முதல் பாராட்டு இவர்கிட்ட இருந்துதான் வரும்… இவருக்கே ஒருமுறை முதல் பாராட்டு கிடைச்சப்போ அழுதுட்டார்.

கமல், ஷோபா, சுமித்ரா நடிச்ச “நிழல் நிஜமாகிறது” படம்.. அதுல 2 பாட்டு ஹிட்… கம்பன் ஏமாந்தான்.. இலக்க‍ணம் மாறுதோ.. ரெண்டுமே வேற வேற ஜோனல்ல இருக்கும்.. இதுல “இலக்க‍ணம் மாறுதோ” ரிக்கார்டிங் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்துட்டார்..

கொஞ்ச நேரத்திலேயே எம்எஸ்வி போன் செய்து “இலக்க‍ணம் மாறுதோ ரொம்ப அழகா பாடியிருக்கே பாலு”ன்னு சொன்னதும், படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாராம்.. இதை எங்கிகிட்ட நிறைய முறை சொல்லி இருக்கார்.

சங்கீதத்தோடு இங்கிதமும் தெரிந்தவர்.. இதுவரைக்கும் யாரையுமே காயப்படுத்தி பேசியதில்லை.. எத்தனையோ பாட்டை உயிரை குடுத்து பாடியிருக்கார்..

ஆனால், அந்த பாட்டை படத்துல இருந்து சில காரணங்களுக்காக தூக்கி எறிந்த சம்பவமும் இருக்கு.. அதுக்கெல்லாம் அவர் கோபப்பட்டதே கிடையாது.. தன்னை நம்பி யார் வந்தாலும் கை தூக்கிவிடுவார்.. அவங்களுக்கும் ஒரு பிரேக் கிடைக்கணும்னு நினைப்பாரு.

யார் சந்திக்க வந்தாலும், “ஸாரி.. ஸாரி.. ரியலி ஸாரி.. ரொம்ப நேரமாக காக்க வெச்சுட்டேனா என்று கேட்டு, என்ன சாப்பிடறீங்க, மொதல்ல காபி சாப்பிடுங்க” என்று சொல்லிட்டுதான் பேச்சையே ஆரம்பிப்பார்.. கடைசி வரைக்கும் பாசிட்டிவ் வார்த்தைகளை தூவி தூவி விதைத்தார்.. எங்களை பொறுத்தவரைக்கும் அவர்தான் “சிகரம்!” என்றனர்