கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஸ்பெயினின் அரசாங்கம் மட்ரிட் அதிகாரிகளிடம் கோரிக்கை

நகரம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஸ்பெயினின் அரசாங்கம் மட்ரிட்டில் உள்ள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

அங்கிருக்கும் மக்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுக்கு “கடுமையான ஆபத்து” ஏற்படும் என்று எச்சரிக்கிறது.

மட்ரிட் கடந்த வெள்ளிக்கிழமை கோவிட் -19 தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நீடித்தது, ஆனால் நகர அளவிலான முடக்கத்திற்கான அழைப்புகளை நிராகரித்தது.

இந்நிலையில் நேற்று கருத்து தெரிவித்த ஸ்பெயினின் சுகாதார அமைச்சர் சால்வடார் இல்லா, தற்போதைய கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை எனக் கூறினார்.

மேலும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இது “உறுதியுடன் செயல்பட வேண்டிய நேரம்” என்றும் கூறினார்.

ஸ்பெயினின் பிராந்தியங்கள் சுகாதாரப் பொறுப்பில் உள்ளன காரணத்தினால் அவர்கள் விரும்பும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் அடையாளம் காணப்பட்ட மையப்பகுதியாக மட்ரிட் உள்ளது.

நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மேலும் 12,272 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 716,481 ஆகக் கொண்டுவந்துள்ளது.

ஸ்பெயினும் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பல நாடுகளும் சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைக் கண்டன.

இந்நிலையில் குளிர்காலம் நெருங்கும்போது ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் வைரஸ் மீண்டும் எழுந்திருப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.