தன்னிச்சையாக நடக்கக்கூடாது தமிழரசுக்கட்சி – பொங்கியெழும் சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு கட்சி தனக்கு மட்டும் உரியது என உரிமை கொண்டாட முடியாது

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசுக்கட்சி உட்பட மூன்று கட்சிகள் உள்ளன. நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என பங்காளிக்கட்சிகளுடன் பேசி ஆலோசனை செய்ய வேண்டியது கட்டாயமாகும். மூன்று கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் தமிழரசுக் கட்சி அவ்வாறு செய்யாமல் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கூட தெரியாமல் கட்சியின் செயலாளர், ஒருவருடைய பெயரை சிபாரிசு செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இவர்கள் இப்படி நடந்து கொண்டமை மிகவும் தவறான செயற்பாடாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு கட்சி தனக்கு மட்டும் உரியது என உரிமை கொண்டாடுவது மிகவும் கவலையான விடயமும் தவறான செயற்பாடுமாகும்.

ஆகவே அவ்வாறான தவறுகள் நடக்குமாக இருந்தால் நாம் மிகப் பெரிய நடவடிக்கையை எடுப்போம். இது தொடர்பில் எம்முடன் உள்ள இன்னொரு கட்சியான ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேசியுள்ளோம்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.