சம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி?: புதிய கூட்டு முயற்சி மும்முரம்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தெளிவான பிளவு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தன்- சுமந்திரன்- துரைராசசிங்கம் என்ற மூன்று நபர்களை தவிர்த்த புதிய அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

இதற்காக தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் முதற்சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்ததும், அவரை அரங்கை விட்டே அகற்றும் முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாவையை அகற்றி விட்டு, சிறிதரனை பொம்மை தலைவராக நியமித்து, தமக்கு வசதியாக காய்களை நகர்த்துவதே சுமந்திரன் தரப்பின் திட்டம்.

கடந்த சில மாதங்களாக எம்.ஏ.சுமந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளிற்கு கட்சிக்குள் மூக்கணாங்கயிறு இடும் முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, மாவையை வீழ்த்தும் நடவடிக்கை சுமந்திரன், சிறிதரன் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அது கச்சிதமாக நடந்து முடிந்தது.

மாகாணசபை தேர்தலின் முன்னதாக மாவையை கட்சியிலிருந்து அகற்றி, சுமந்திரன்- சிறிதரன் குழுவினரின் ஆதரவாளர்களை மட்டும் களமிறக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை புறமொதுக்கி- சம்பந்தன், சுமந்திரன், துரைராசசிங்கம் அணியினர், மாவையை தேசியப்பட்டியல் நியமனத்திலிருந்து ஒதுக்கினர்.

இந்த நிலையில், இரா.சம்பந்தன், சுமந்திரன், துரைராசசிங்கம் ஆகிய நபர்களை தவிர்த்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் திரைமறைவில் கடந்த சில தினங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்களே இதற்காக முன்கையெடுத்து செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழரசு செயலாளர், சம்மந்தன்-சுமந்திரன் குழுவின் எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்பட்டு வருவதால், இலங்கை தமிழ் அரசு கட்சியை யார் உரிமை கோரலாம் என்ற சட்ட ஆலோசனையை பெறுவதில் இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளதையும் தமிழ்பக்கம் அறிந்தது.

இதுதவிர, தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அணிகளுடன் நேரடி கூட்டு அல்லது கொள்கை நிலைப்பாட்டில் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்புக்களுடன் திமைறைவு பேச்சுக்கள் தீவிரம் பெற்றுள்ளன. சுமந்திரன் இல்லாத தரப்புக்களுடன் இணைந்த செயற்பட தயாராக இருப்பதாக ஏற்கனவே கஜேந்திரகுமார் அறிவித்திருந்தார்.

இந்த கூட்டு முயற்சி வெற்றிபெற்றால், கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் 1 நாடாளுமன்ற உறுப்பினருடன் புதிய சக்தியாக தமிழ் தேசிய அரங்கில் இந்த அணி மேலெழும்.

5 ஆசனங்களுடன் சம்பந்தன்-சுமந்திரன் அணி இரண்டாமிடத்திற்கு தள்ளப்படும்